தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம்: அன்புமணி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: 1703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிடவில்லை என்றால் பல்லாயிரக் கணக்கான உழவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "சென்னையை அடுத்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்க 1146 ஏக்கர் விளைநிலங்கள் உட்பட மொத்தம் 1703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்காக முப்போகம் விளையும் நிலங்களை பறிக்க தமிழக அரசு துணை போவது கண்டிக்கத்தக்கது; ஏற்க முடியாதது. தமிழக அரசின் 2022-23ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில், தமிழகத்துல் உலகளாவிய பங்களிப்புடன் அறிவு நகரம் உருவாக்கப்படும்; அதில் உலகின் புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கிளைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை பாமக-வும் வரவேற்றது. ஆனால், இந்தத் திட்டத்தை அரசு நிலங்களில் செயல்படுத்துவதற்கு பதிலாக சென்னைக்கு அருகில் விளை நிலங்களில் செயல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. அதற்காக ஊத்துகோட்டை வட்டத்திலுள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப் பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களிலிருந்து 1703 ஏக்கர் நிலங்களை கையகப் படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இவற்றில் அரசு புறம் போக்கு நிலங்கள் 556 ஏக்கர் தவிர மீதமுள்ள 1146 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் ஆகும். அவற்றை உழவர்களிடமிருந்து பறிக்க முயல்வதை நியாயப்படுத்த முடியாது. தமிழ்நாடு அறிவு நகரம் திட்டத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் ஆரணி ஆற்றங்கரையில் அமைந்திருப்பவை.

மூன்று போகங்களும் சிறப்பாக விளையக் கூடியவை. அந்த நிலங்கள் தான் பல்லாயிரம் உழவர்களுக்கும், உழவுத் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதாரமாக திகழ்கின்றன. தங்களின் கவுரவமான வாழ்க்கைக்கு வகை செய்யும் நிலங்களை உழவர்கள் கடவுளாக பார்க்கின்றனர். அந்த நிலத்தை பறிக்க அரசு முயல்வதை உழவர்கள் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

அதுவும் கையகப்படுத்தப்படவுள்ள 1146 ஏக்கர் நிலங்களுக்கு விலையாக ரூ.174.52 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஓர் ஏக்கருக்கு சராசரியாக ரூ.15 லட்சம் மட்டுமே வழங்கப்படும். ஓர் ஏக்கர் நிலத்தில் ஓராண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித் தரும் நிலங்களுக்கு ஒட்டுமொத்தமாகவே ரூ.15 லட்சம் விலை வழங்குவதென்பது உழவர்களையும், அவர்களின் உடமைகளையும் சுரண்டும் செயலாகும்.

இதற்கு அரசு துணை போகக் கூடாது. தமிழ்நாடு அறிவு நகரம் அமைப்பதையோ, அங்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்களை ஏற்படுத்துவதையோ பாமக ஒரு போதும் எதிர்க்கவில்லை. தமிழகத்தின் உயர்கல்வி வளர்ச்சிக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அவை தேவை என்பதில் பாமக உறுதியாக உள்ளது. ஆனால், வேளாண் விளை நிலங்களை அழித்து விட்டு தான் அவற்றை அமைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது.

தமிழக அரசு நினைத்தால், தென் மாவட்டங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மதுரைக்கு அருகில் உள்ள அரசு நிலங்களில் அறிவு நகரத்தை அமைக்கலாம். கொங்கு மண்டலத்திலும் இத்தகைய அறிவு நகரத்தை அமைக்கும் அளவுக்கு நிலங்கள் உள்ளன. சேலத்தில் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் சேலம் இரும்பாலைக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலம் உள்ளது.

அங்கு தமிழ்நாடு அறிவு நகரத்தை அமைக்கவும் தடையில்லை. இவ்வளவு வாய்ப்புகளையும் ஒதுக்கிவிட்டு, சென்னைக்கு அருகில் வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தி தான் அறிவு நகரம் அமைக்கப்படும் என அரசு கூறுவதை ஏற்க முடியாது. அதையும் கடந்து வெளி நாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்களை அமைக்க 1703 ஏக்கர் நிலம் தேவையில்லை.

கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களில் நான்கில் ஒரு பங்கு பரப்பளவில் வெளிநாட்டு பல்கலை கழகங்களின் வளாகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு மீதமுள்ள நிலங்கள் அனைத்தும், தமிழ்நாடு அறிவு நகரத்தை அமைக்கும் நிறுவனத்தால், நில வணிகம் செய்யப்படும் என்பது தான் உண்மை. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த காலங்களில் பல்வேறு பெயர்களில் நகரங்கள் அமைக்கப்பட்ட போது இது தான் நடந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

இப்படியாக, சில நிறுவனங்கள் நில வணிகம் செய்து கோடிக் கணக்கில் லாபம் பார்க்க வேண்டும் என்பதற்காக பல தலைமுறைகளாக வேளாண்மை செய்து வந்த நிலங்களை உழவர்களிடமிருந்து பறிப்பது நியாயமற்றதாகும். அதற்கு மாறாக, எங்கெல்லாம் அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளனவோ?

அங்கெல்லாம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளை வளாகங்களை தமிழக அரசு அமைப்பது தான் சரியானதாக இருக்கும். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்காக நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்துத் தேவைகளுக்காகவும் கையகப்படுத்தப்படும் இடங்களில் பெரும்பாலானவை வேளாண் விளை நிலங்கள் ஆகும்.

தொழில் துறை, கல்வித் துறை, விளையாட்டுத் துறை, உட்கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துத் தேவைகளுக்காகவும் வேளாண்விளை நிலங்கள் கையகப்படுத்தப் பட்டால், வேளாண் தொழிலும், உணவுப் பாதுகாப்பும் என்னவாகும்? என்பதை உணராமலேயே கண்மூடித்தனமாக விளை நிலங்களை கையகப்படுத்த அரசு துடிப்பது நியாயமல்ல.

இந்தப் போக்கை அரசு கைவிட வேண்டும். திருவள்ளூர் மாவட்டம் கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், வெங்கல் ஆகிய ஊர்களில் 1703 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். அப்பகுதிகளில் ஒரு கைப்பிடி மண்ணைக் கூட கையகப்படுத்தக் கூடாது.

அதற்கு மாறாக, நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு முயன்றால், அதை எதிர்த்தும், கண்டித்தும் பல்லாயிரக் கணக்கான உழவர்களைத் திரட்டி பாமக சார்பில் மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை நானே தலைமையேற்று நடத்துவேன் என்று தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்." என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்