தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு: ஆரஞ்சு அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று (நவ.3) முதல் நவம்பர் 6 வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் நாளை (நவ.4) மிக கனமழை பெய்யலாம் என்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, நீலகிரி, தேனி , திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரத்தை சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு என நான்கு நிறங்கள் மூலம் வானிலை ஆய்வு மையம் உணர்த்துகிறது. இவற்றில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்தால் வானிலை மோசமாக உள்ளது, கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என்று அர்த்தம். எனவே உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்டங்கள் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்பதை வானிலை ஆய்வு மையம் இதன் மூலம் புலப்படுத்துகிறது.

நவம்பர் 3 முதல் 6 வரை: இன்று (நவ. 3) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் 5-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும், வரும் 6-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று (நவ.3) காலை முதலே சென்னையில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை 10 மணி தொடங்கியத்திலிருந்து அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE