கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரிய 11.85 லட்சம் விண்ணப்பங்கள் பரிசீலனை: தீபாவளிக்கு முன்பு ரூ.1,000 விடுவிப்பது குறித்தும் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்த 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவ.12-ம் தேதிக்கு முன்பாகவே ரூ.1000 உரிமைத் தொகையை விடுவிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்.15-ம் தேதி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது.

இதற்கிடையே, இந்ததிட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அத்துடன், விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, தகுதியற்ற பயனாளிகள் என 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் கடந்த மாதம் நீக்கப்பட்டன. புதிதாக பல பயனாளிகளும் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது மேல்முறையீடு மற்றும் புதிதாக விண்ணப்பித்துள்ள 11.85 லட்சம் மகளிரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்த விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கை இம்மாத இறுதியில் எடுக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு அதற்கான குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

தீபாவளி பண்டிகைநவ.12-ம் தேதி வருவதால்,அவர்களது தீபாவளி கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு,முன்கூட்டியே தொகையைவிடுவிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE