“நான் கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன்” - காமராசர் பல்கலை. மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்வு

By என். சன்னாசி

மதுரை: “நானும் கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன்” என மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது ஆளுநர் ஆர்.என்.ரவி அனுபவம் பகிர்ந்தார்.

இந்தப் பல்கலைகழகத்தின் 55-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர், பி.எச்டி., முதுகலை, இளங்கலை பாடங்களில் பதக்கம் வென்ற மாணவர்களிடம் பிரத்யேக கலந்துரையாடல் செய்தார். அப்போது அவர் பேசியது: “மாணவர்கள் ஆழமாக படித்தால்தான் கற்ற கல்வி மனதில் நிற்கும். வழக்கமாக இரவில் அதிகம் நேரம் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும். அதிகாலை படிப்புதான் சிறந்தது. நான் அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது கிடையாது. மாணவர்கள் தேவையின்றி அலைபேசியில் மூழ்கியிருக்காதீர்கள்.

உங்களுக்கு என ஒரு வாழ்க்கை, இலக்கு உள்ளது. அப்துல் கலாம் கூறியது போல் ஒவ்வொருவரும் துாங்கவிடாத ஒரு கனவை காணுங்கள். அந்தக் கனவு பெரிதாக இருக்க வேண்டும். அது உங்களை துாங்கவிடாமல் துரத்த வேண்டும். அப்போதுதான் அதை உங்களால் அடைய முடியும். பதக்கம் பெற்ற நீங்கள் சாதாரண மாணவர்கள் அல்ல. உங்களுக்காக இலக்கு காத்துக்கொண்டிருக்கின்றன. அதை அடைய மேலும் மேலும் உழைக்க வேண்டும். அதற்கு உங்களுக்கு நேர மேலாண்மை மிக அவசியம். திட்டமிட்டு படியுங்கள் வாழ்க்கையில் சாதிக்கலாம்.

ஐ.பி.எஸ் பணி, கவர்னர் பதவி இதில் எது எளிது என கேட்கிறீர்கள். எந்தப் பணியை செய்தாலும் அதில் ஆர்வம் இருக்க வேண்டும். விரும்பி செய்ய வேண்டும். அப்படித்தான் என் பணிகள் எதுவாக இருந்தாலும் அதை விரும்பி செய்கிறேன். நேர்மையாக நடக்கிறேன். நானும் சாதாரண குடும்பத்தில் பிறந்து நடந்து சென்றுதான் பள்ளிப் படிப்பை முடித்தேன். கடைசி பெஞ்ச் மாணவராக இருந்தேன். ஆர்வம் காரணமாக கல்வியை புரிந்து படித்தேன். தமிழ் எனக்கு அதிகம் பிடிக்கும். குறிப்பாக திருக்குறளில் உள்ள கருத்துக்கள் ஆழமானவை. அனைவரும் அதை படிக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE