காமராசர் பல்கலை.யில் மாணவர்களுடன் ஆளுநர் ரவி கலந்துரையாடல்: பேராசிரியர்களுக்கு அனுமதி மறுப்பு

By என். சன்னாசி

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவைத் தொடர்ந்து பதக்கம் வென்ற மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலைந்துரையாடல் நடத்தினார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள், பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அதிருப்தி எழுந்தது.

இப்பல்கலைக்கழகத்தில், 55-ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி, மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இதன்பின், விழாவில் ஆளுநர் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் பேசவில்லை. இருப்பினும், பட்டமளிப்பு விழாவில் பட்டத்துடன் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் 140-க்கும் மேற்பட்டோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல் நடத்தும் நிகழ்வுக்கு திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது.

பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அப்துல் கலாம் அரங்கில் இக்கலந்துரையாடல் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் தீவிர பரிசோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 30 நிமிடம் வரை நடந்த இந்நிகழ்வில் பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கவில்லை. பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்களும் கலந்துரையாடல் நிகழ்வின்போது, பங்கேற்க முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது. இது பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும், கலந்துரையாடலில் பங்கேற்ற மாணவ, மாணவிகளிடம் அவர்களின் எதிர்கால படிப்பு, வேலை வாய்ப்பு போன்ற அறிவுரைகளை ஆளுநர் தெரிவித்திருக்கலாம் என கூறுப்படுகிறது. நிகழ்வின் முக்கிய அம்சங்கள் > தமிழக அரசுக்கு பாராட்டு முதல் காலி இருக்கைகள் வரை - ஆளுநர் பங்கேற்ற காமராசர் பல்கலை. பட்டமளிப்பு விழா ஹைலைட்ஸ்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE