குற்றாலநாதர் கோயில் பகுதியில் தற்காலிக கடைகளுக்கான டெண்டருக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

By கி.மகாராஜன் 


மதுரை: குற்றாலம் குற்றாலநாதர் கோயில் பகுதியில் தற்காலிக கடைகள் நடத்துவதற்கான டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றாலத்தை சேர்ந்த கதிர்வேல், கருப்பசாமி, ஐயப்பன், முருகேசன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயிலை ஒட்டியுள்ள பகுதிகளில் தற்காலிக கடைகள் நடத்த டெண்டர் விடப்படுகிறது. கடந்த ஆண்டு கடைகள் நடத்த டெண்டர் எடுத்து தீ விபத்தால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு இந்தாண்டு டெண்டர் இல்லாமல் கடைகள் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், "கடந்த ஆண்டு தீ விபத்தில் மனுதாரர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். ஒரே நபர்கள் கடைகளை வாடகைக்கு எடுத்து உள் வாடகைக்கு விடும் முறைகேடும் நடைபெறுகிறது. இதனால் டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், இதே கோரிக்கையுடன் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு டெண்டர் அறிவிப்புக்கு தடை கோரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்காமல், கோயில் கடைகள் ஏல நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி, குற்றாலம் வழக்கில் உயர் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞர் ஆணையர்கள் தீ விபத்து நடந்த இடத்தில் கடைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதை கருத்தில் கொள்ளாமல் பணம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கடைகளுக்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலில் முன்பு நிகழ்ந்த தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கோயில் சுவரில் வர்ணம் கூட பூசவில்லை. கோயிலின் நலனை பார்க்காமல் பணம் ஈட்டும் நோக்கத்தில் டெண்டர் விடுவதை ஏற்க முடியாது. இதனால் தற்காலிக கடைகள் ஏலத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றாலம் காவல் ஆய்வாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் கோயில் பகுதியில் ஏற்கெனவே எப்படி தீ விபத்து நடந்தது என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். குற்றாலம் வழக்கில் உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நியமித்த வழக்கறிஞர் ஆணையர்கள் வெங்கட்ரமணா, அருண் சுவாமிநாதன் ஆகியோர் குற்றாலத்துக்கு நேரில் சென்ற தீ விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை நவம்பர் 17-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE