ஸ்ரீவில்லிபுத்தூர் | கிராம சபை கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

By அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கேள்வி எழுப்பிய விவசாயி அம்மையப்பன் என்பவரை ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் காலால் எட்டி உதைத்த விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பிள்ளையார்குளம் ஊராட்சியில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலரை பணியிட மாறுதல் செய்த உத்தரவை செயல்படுத்தாதது குறித்து கேட்டதற்கு விவசாயி அம்மையப்பனை ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் காலால் எட்டி உதைத்தார். எம்எல்ஏ மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அதிகாரிகள் முன்னிலையில் கேள்வி கேட்டதற்காக விவசாயியை ஊராட்சி செயலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த புகாரின் பேரில் ஊராட்சி செயலர் தங்க பாண்டியன் மீது கொலை முயற்சி உட்பட 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் படி ஊராட்சி செயலர் தங்க பாண்டியனை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி பணியிடை நீக்கம் செய்தார்.

இந்நிலையில், கிராம சபைக் கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. மேலும் இது குறித்து தாமாக முன் வந்து விசாரணையைத் தொடங்கி உள்ளது. ஊராட்சிகள் உதவி இயக்குநர் விசாலாட்சி விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இன்று காலை ஶ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் பிடிஓ மீனாட்சி, ஊராட்சி தலைவர் பூங்கொடி, விவசாயி அம்மையப்பன், குடிநீர் மேற்பார்வையாளர் வசந்தி ஆகியோரிடம் தனித் தனியாக உதவி இயக்குநர் விசாலாட்சி விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை மாநில மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்ப உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE