மதுரை | ஆளுநர் வருகைக்கு எதிரான போராட்ட அறிவிப்பால் காமராஜர் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு தீவிரம்

By எஸ்.ஸ்ரீனிவாசகன்


மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக 55வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஆளுநர் வருகை தருவதால், மதுரை விமான நிலையம், பல்கலைக்கழகம் மற்றும் முக்கிய சாலைகளில் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்போம் என அறிவித்திருந்தது. இதனையடுத்தே, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், விமான நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் போலீஸார் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் நான்கு வழிச்சாலை நுழைவாயில், கீழக்குயில்குடி விலக்கு மற்றும் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகத்துக்குரிய நபர்களை மற்றும் அவர்களின் உடைமைகளை சோதனை செய்த பின்னர்தான் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதிக்கின்றனர். மேலும், கட்சிக் கொடியுடன் வரும் வாகனங்கள் கொடிகளை அப்புறப்படுத்திய பின்னரே வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE