மேலும் ஒரு திருப்பூர் மாணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு: டெல்லியில் கேள்விக்குறியாகும் தமிழக மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு

By இரா.கார்த்திகேயன்

திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு டெல்லியில் மர்மமான முறையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

திருப்பூர் மங்கலம் சாலை பாரப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வமணி (56). காங்கயம் சாலை மணியகாரம்பாளையத்தில் சாய ஆலை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலெட்சுமி(எ) கண்ணம்மாள்(48). தம்பதியருக்கு இரு குழந்தைகள். மகன் சரத்பிரபு (24). மகள் சிநேகா பொன்மணி (22). மகன் சரத்பிரபு எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு எம்டி (பொது மருத்துவம்) படிப்புக்காக டெல்லி ஷாதரா மாவட்டத்தில் தில்ஷாத் கார்டன் பகுதியில் அமைந்துள்ள யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் மெடிக்கல் சயின்சஸ் கல்லூரியில் (யுசிஎம்எஸ்சி) கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை தில்ஷாத் கார்டன் பகுதியில் தங்கியிருந்த அறையில் இருந்த மற்றொரு மாணவர் அரவிந்த் என்பவர் சரத்பிரபுவின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு அவர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது தந்தை மற்றும் நண்பர்கள் சிலர் டெல்லிக்கு விமானத்தில் சென்ற நிலையில், திருப்பூர் பாரப்பாளையம் வீட்டில் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர்.

டெல்லியில் இருந்து அழைப்பு

சரத்பிரபுவின் சித்தப்பா ஜெயகாந்தன் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில் 1187 மதிப்பெண் பெற்றவர். மிகவும் திறமையானவர். கோவை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு, எம்டி மேல்படிப்புக்காக கேரளமாநிலம் திருச்சூரில் ‘நீட்’ நுழைவுத் தேர்வு மையத்தில் சேர்ந்து ஒரு வருடம் படித்து, நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார்.

டெல்லியில் யுசிஎம்எஸ்சி கல்லூரியில் எவ்வித செலவும் இன்றி முழுக்க முழுக்க மெரிட் அடிப்படையில் சேர்ந்தார். இன்று (நேற்று) காலை 7.30 மணிக்கு எங்களுக்கு செல்போனில், அவருடன் தங்கியிருந்த மருத்துவர் அரவிந்த் தொடர்பு கொண்டார். சரத்பிரபு படுக்கையில் இருந்து கீழே விழுந்து அடிபட்டதாகவும் கூறினார். சில நிமிடங்களில் அரவிந்தே செல்போனில் எங்களை தொடர்புகொண்டு கழிப்பறையில் தவறி கீழே விழுந்து அடிபட்டதாக தெரிவித்தார். மருத்துவமனையில் சேர்த்து விசாரித்ததில் சரத் இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார் என்று கூறினார்.

சரத்பிரபுவின் குடும்பத்தினர் கூறியதாவது: சரத்துக்கு எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லை. நேற்று (ஜன.16) இரவு கூட குடும்பத்தார் அனைவரிடமும் நல்லமுறையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் கோழை அல்ல. அதேபோல், எந்த வம்புகளுக்கும் செல்லாதவர். அவரது மரணத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் குடும்பத்தில் இருந்து மெரிட்டில் படித்து ஒரு மருத்துவர் உருவானபோது நாங்கள் எந்தளவு சந்தோஷம் அடைந்தோமோ, அதைவிட இன்றைக்கு மிகப்பெரிய சோகத்தில் உள்ளோம். சரத்பிரபுவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டுவர வேண்டும் என்றனர்.

தொடரும் மரணம்..

டெல்லி எய்ம்ஸில் படிக்கச் சென்று திருப்பூர் மருத்துவர் சரவணன் என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். அவரது தந்தை கணேசன், சரத்பிரபுவின் வீட்டுக்கு ஆறுதல் சொல்ல வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: எனது மகன் சரவணனை விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டார்கள். தற்கொலை அல்ல என அன்றைக்கே நாங்கள் சொன்னோம். டெல்லி போலீஸார் தற்கொலை என கேஸை இழுத்துமூடவே பார்த்தனர். நாங்கள் வழக்கு தொடுத்துள்ளோம்.

அதேபோல், சரத்பிரபு இறந்துள்ளார். டெல்லியில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. எனதுமகன் மரணத்துக்கு பிறகாவது தமிழக அரசு ஏதேனும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், அதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதையே இந்த மரணமும் உணர்த்துகிறது. முதலில் தற்கொலை என்று சொல்லி கேஸை முடிக்கத்தான் பார்ப்பார்கள். இது டெல்லியில் வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான். விசாரணையில்தான் கொலை என்பது தெரியவரும் என்றார்.

டெல்லி சென்ற சரத்பிரபுவின் உறவினர் நவநீதகிருஷ்ணன் ‘தி இந்து’விடம் கூறியதாவது: தெற்கு டெல்லி ஜி.டி.பி. அரசு மருத்துவமனையில் சரத்பிரபுவின் சடலத்தை வைத்துள்ளனர். அவருடன் தங்கியிருந்த இருவரிடமும், போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் சரத்பிரபு தற்கொலை செய்துள்ளார் என்று போலீஸாரிடம் கூறியதாகத் தெரிகிறது. தற்போது படித்துவரும் கல்லூரியை பிடிக்காமல் இப்படி செய்ததாக கூறுகின்றனர்.

நிச்சயம் சரத்பிரபு தற்கொலை செய்துகொள்பவர் அல்ல. எப்போதும் அந்த மனநிலைக்கு செல்லாதவர். புதுச்சேரியில் ஜிப்மரில் கிடைத்த வாய்ப்பை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, ஆசையுடன் டெல்லியில் சேர்ந்துள்ளார். போலீஸார் உரிய முறையில் விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்றார்.

சரத்பிரபுவின் வீட்டுக்கு வந்து, திருப்பூர் தெற்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கே.தங்கவேல், முன்னாள் மேயர் க.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் துக்கம் விசாரித்தனர்.

அதிமுக அரசின் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சு.குணசேகரன் சரத்பிரபுவின் வீட்டில் துக்கம் விசாரித்து கூறியதாவது: தமிழக சுகாதாரத் துறைமூலம் பேசி டெல்லியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ மாணவர் சரத்பிரபு மரணம் தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தரப்படும். தமிழக மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்