வேலூர்: இந்தியாவில் இந்தி மொழி மீது காட்டும் அக்கறையை இந்தி பேசும் மக்கள் மீதும் காட்ட வேண்டும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றத்தின் 35-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் கோ.விசுவாதன் தலைமை தாங்கி பேசும் போது, ‘‘கவிஞர் பாரதி தாசனை போன்று இன்னொறு கவிஞரை பார்க்க முடியாது. பாரதி தாசனை போன்ற துணிச்சல் மிகுந்த இன்னொரு கவிஞரை பார்க்க முடியாது.
எனது கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதி தாசனை அழைத்து வந்து பேச வைத்தேன். அப்போது, சாதியின் மீது, மதத்தின் மீது, கடவுளின் மீது ஒரு அடி எனக் கூறினார். பாரதி தாசன் தான் பெண்ணுரிமைக்காக அதிகளவில் எழுதியவர். நமக்கு ஈடாக எந்த மொழியும் இல்லை.
உலகில் 3 ஆயிரம் ஆண்டுகள் கடந்து நிற்கும் 7 மொழிகளில் இன்றளவும் எழுத்தும், பேச்சும் மாறாமல் இருப்பது தமிழ் மொழி மட்டுமே. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் கடந்தது சிந்து சம வெளி நாகரீகம். அந்த சிந்து சம வெளி நாகரீகத்தில் பேசப்பட்ட மொழி தமிழ். அப்போது, இந்தியா முழுவதும் தமிழ் தான் பேசப்பட்டுள்ளது.
சுமார் 4,500 ஆண்டு களுக்கு முன்பு ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். வெறும் விவசாயம் செய்தவர்கள் குதிரை மீது வந்த ஆரியர்களிடம் போரிட முடியவில்லை என்று கூறு கிறார்கள். ஆரியர்கள் வருகைக்கு பிறகு நாட்டின் வடபகுதியில் பாலி, சமஸ்கிருத மொழிகள் வந்தன. அண்மைக் காலமாக தமிழ், திராவிடம், ஆரியர் பற்றி பேச்சு வருகிறது.
புராணம், இதி காசங்களுடன் வரலாற்றை சேர்த்து சொல்கிறார்கள். சமஸ்கிருதம் பேச்சு வழக்கிலிருந்து அழிந்ததற்கு பிரமாணர்களை தவிர சூத்திரர்கள், பெண்கள் அந்த மொழியை கற்கக் கூடாது என்ற தடை இருந்தது. அதன் விளைவாகத்தான் சமஸ்கிருதத்தை பெரும்பாலான மக்கள் படிக்க முடியாமலேயே போய் விட்டது.
தற்போது, இந்தி யாவில் சுமார் 22 ஆயிரம் பேர் மட்டுமே சமஸ்கிருதத்தில் எழுத, பேச தெரிந்தவர்கள் உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. திராவிடம் என்ற சொல்லை கடந்த 1856-ம் ஆண்டு கால்டுவெல் தான் பயன்படுத்தினார் என கூறுவது தவறு. வரலாற்றில் களப்பிரர்கள் ஆட்சிக் காலம் 3 முதல் 6-ம் நூற்றாண்டு வரை.
களப் பிரர்கள் சமணம், புத்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். இதில், பொது ஆண்டு 470-ல் வஜ்ஜிரநந்தி என்ற சமண முனிவர் தான் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட சொல்லை பயன்படுத்தி உள்ளார். அவர் தமிழை காக்க வேண்டும், சாதி இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளார். அதைத்தான் பெரியார் பின்னாளில் பயன்படுத்தினார்.
ஒரு மொழி வளர்வது அதனை பேசும், எழுதும் மக்களை சார்ந் துள்ளது. ஒரு காலத்தில் சாதாரண மொழியாக இருந்த ஆங்கிலம் தற்போது உலகமொழியாக மாறியிருப்பதற்கு ஆங்கிலேயர்கள் 70-க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்சி செய்ததே காரணமாகும். எனினும், தமிழகத்தில் இந்தியுடனான பிரச்சினை எப்போதும் தொடர்ந்து கொண்டுள்ளது. காந்தி இந்துஸ் தானி மொழியை ஆதரித்தார்.
அவர் உயிரிழந்த பிறகு இந்தியை ஆட்சி மொழியாக்க அரசியல் நிர்ணய சபையில் முடிவு செய்தனர். அப்போது, தென்னிந்தியாவில் இருந்து சென்றவர்கள்தான் இந்திக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதன் விளைவாக நேரு காலத்தில் இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக தொடர சட்டம் கொண்டு வரப்பட்டு, சாஸ்திரி காலத்தில் உறுதியளிக்கப்பட்டது.
பின்னாளில், இந்திராகாந்தி ஆட்சி காலத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இப்போதும் கூட மத்திய அரசின் திட்டங்கள் புரியாத வகையில் இந்தி மொழியில் உள்ளது. அதற்கு உரிய ஆங்கில விளக் கமும் அளிப்பதில்லை. எனவே, மொழிகளை பொறுத்தவரை மத்திய அரசு நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், மொழி என்பது மாநிலங்களை மட்டுமல்ல, நாடுகளையும் பிரிக்கும் வல்லமை படைத்தது.
நாம் சுதந்திரம் பெற்ற போது இந்தியா மதத்தால் கிழக்கு பாகிஸ்தான், பாகிஸ்தான் என பிரிக்கப்பட்டது. பின்னாளில், மொழி பிரச்சினையால் தான் பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தானாக இருந்து வங்க தேசம் உருவானதை மறக்கக் கூடாது. இந்தியாவில் இந்தி மொழி மீது காட்டும் அக்கறையை இந்தி பேசும் மக்கள் மீதும் காட்ட வேண்டும்’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட இயக்க தமிழர் பேரவை நிறுவனர் சுப.வீரபாண்டியன் பங்கேற்றுப் பேசும் போது, ‘‘மனிதர்களை, விலங்கு களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுவது மொழிதான். உலக வரலாற்றில் அடிமை மரபுகளை உடைத்ததற்கும், பல நாடுகள் சுதந்திரம் பெற்றதற்கும், புரட்சி ஏற்படவும், சுயமரியாதை உணர்வு ஏற்படவும் எழுத்தும், பேச்சுமே காரணமாகும்.
வெறும் சாதியாகவும், மதமாகவும் பிரிந்து கிடந்த நம்மை ஒன்றிணைத்தது இந்த பேச்சும், எழுத்தும்தான்’’ என்றார். நிகழ்ச்சியில், விஐடி துணைத் தலைவர் சங்கர் விசுவ நாதன், துணை வேந்தர் (பொறுப்பு) காஞ்சனா பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago