“சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படவில்லை” - பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூர்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு 3 ஆண்டுகளாக செயல்படவில்லை என்று முன்னாள் ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தரிசனம் மேற்கொண்ட அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "சர்வதேச சிலை கடத்தல்காரர் சுபாஷ் சந்திரகபூரை 2011-ம் ஆண்டில் ஜெர்மனியில் கைது செய்து, இந்தியாவுக்கு 2012-ம் ஆண்டு கொண்டு வந்து தமிழக சிறையில் அடைத்தோம். அதன்பிறகு நாங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், நியூயார்க்கில் உள்ள நுண்ணறிவு பிரிவினர் நீதிமன்றத்தில் ஏராளமான ஆணைகளைப் பெற்று, சுபாஷ் சந்திரகபூரின் கலைக்கூடம், கிடங்கிலிருந்து 1,411 தொன்மையான ஐம்பொன், கல், செப்புத் தெய்வத் திருமேனிகளைக் கைப்பற்றினர். இதையடுத்து, இச்சிலைகளை அமெரிக்காவிலுள்ள இந்திய வெளியுறவுத் துறை அலுவலகத்தில் அமெரிக்க அரசு ஒப்படைத்தது.

இவற்றில் சுமார் 50 சிலைகள் தமிழக கோயில்களுக்கு சொந்தமானவை. ஆனால், இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்ட 1,411 தெய்வத் திருமேனிகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2 பெரிய நடராஜர் செப்புத் திருமேனிகள், உமா பரமேஸ்வரி செப்புத் திருமேனிகள், புத்தர் கருங்கல் திருமேனி, ஐம்பொன் ஜைன செப்புத் திருமேனி உள்பட 14 சிலைகள் ஒப்படைக்கப்படவில்லை என்ற தகவல் அதிர்ச்சியாக உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து 2019-ம் ஆண்டு வரை சிலை திருட்டு தடுப்பு காவல் பிரிவு உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து தமிழக அரசின் மேற்பார்வையில் இயங்கி வரும் இத்துறை 3 ஆண்டுகளாக செயல்படவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இயங்கும் இந்த அரசு, சிலை திருட்டு தடுப்பு பிரிவின் இத்தகைய போக்கை கைவிட உத்தரவிட வேண்டும்.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பூஜை செய்யலாம். உண்டியல் தொகையை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். இதிலுள்ள கற்களை எடுத்துப் போட்டால்கூட சிறைக்குச் செல்ல வேண்டும். எனவே, இக்கோயில் சுவரில் ஆணி அடித்ததற்கு இந்திய தொல்லியல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE