“மேட்டூர் நகராட்சித் தலைவருக்கு புதிதாக கார் வாங்கக் கூடாது” - கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதம்

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் நகராட்சித் தலைவருக்கு புதிதாக கார் வாங்க, கூடாது என கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நகராட்சி அவசரக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் சந்திரா தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், நகராட்சி ஆணையர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 17 தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டன. அப்போது, கவுன்சிலர்கள் பேசியது: "நகராட்சி ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள கடைகளை அகற்றாமல் வரி விதிக்க வேண்டும். இதன் மூலம் நகராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். சீதாமலை அடிவாரப் பகுதிகளில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையம் உள்பட 3 இடங்களில் உள்ள மோட்டார்கள் பழுதடைந்துள்ளன. இவற்றை விரைவில் சரிசெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினை வராது. நகராட்சிப் பகுதிகளில் பல இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாமல் உள்ளன. இப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

நகராட்சியில் உள்ள வாகனங்கள் பழுதடைந்துள்ளன. 5-க்கும் மேற்பட்ட வாகனங்கள் 2 மாதங்களாக பட்டறையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல, எஃப்சி, இன்சூரன்ஸ் செய்யால் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நகராட்சியில் பணிகள் செய்ய முடியாமல், வாடகைக்கு வண்டி எடுக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற நிலையில், நகராட்சித் தலைவருக்கு எதற்கு புதிதாக கார் வாங்க வேண்டும். தற்போதைக்கு நகராட்சித் தலைவருக்கு புதியதாக கார் வாங்கக் கூடாது. காரை சொந்தப் பயன்பாட்டுக்கு தலைவர் பயன்படுத்துகிறார்" என்று பேசினர்.

நகராட்சித் தலைவர் சந்திரா பேசுகையில், ‘‘நான் சொந்த பயன்பாட்டுக்காக கார் பயன்படுத்துவதில்லை. அரசு நிகழ்ச்சி, அலுவலகத்துக்கு வந்து செல்லவே காரை பயன்படுத்துகிறேன்’ என்றார்.

கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆணையர் நித்யா பேசியது: "நகராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் நடக்கும் பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகே சாலை அமைக்கப்படுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் விரைவில் பாதாள சாக்கடை பணி முடிவடையும். பழுதடைந்த மோட்டார்கள் விரைவில் சரி செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். நகராட்சியில் உள்ள வாகனங்களுக்கு பல ஆண்டுகளாக எஃப்சி, இன்சூரன்ஸ் செலுத்தவில்லை. நான் பொறுபேற்ற பிறகு, அதனை ஆய்வு செய்து மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளேன்" என்றார். தொடர்ந்து, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சித் தலைவருக்கு புதிய கார் வாங்குவது என்பது உள்ளிட்ட 2 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE