அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கு இழுத்தடிப்பு: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: தமிழகத்தில் 5 ஆண்டுக்கு முன்பு நடைபெற்ற அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க நியமிக்கப்பட்ட நீதிபதி பதவி விலகிய நிலையில், விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த ரவிச்சந்திரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அப்சல் (ஏபிஎஸ்ஏஎல்) நிதி நிறுவனத்தில் நான் உட்பட பலர் ரூ.18.17 லட்சம் முதலீடு செய்தோம். அந்த நிறுவனம் உறுதியளித்த படி முதலீட்டு தொகைக்கு வட்டி மற்றும் முதலீட்டு தொகைக்கு ஏற்ப இடம் தரவில்லை. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் 2017-ல் வழக்கு பதிவு செய்தனர்.

முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரம் தலைமையில் பொருளாதார குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர், அப்சல் நிறுவன மேலாளர் ஆகியோர் கொண்ட குழுவை உயர் நீதிமன்றம் அமைத்தது. இந்தக் குழுவின் நடவடிக்கைகளுக்கு நிதி நிறுவனம் ஒத்துழைக்கவில்லை. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளை நிதி நிறுவனம் நிறைவேற்றாமல் 3 ஆண்டுகளாக தாமதப் படுத்தி வந்ததால் குழு தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற நீதிபதி விலகியதுடன், நிதி நிறுவனத்தினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் புகார் அனுப்பியுள்ளார்.

அதன் பிறகும் நிதி நிறுவன மோசடியில் தொடர்புடையவர்களை கைது செய்யவோ, வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவோ கடந்த 5 ஆண்டுகளாக போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். அப்சல் நிதி நிறுவனம் 60 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.64 கோடியே 35 லட்சத்து 30 ஆயிரத்து 120 வசூலித்து மோசடி செய்துள்ளனர். இந்த மோசடியில் தொடர்புடையவர்களை தப்பிக்க வைக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். எனவே, அப்சல் நிதி நிறுவன மோசடி வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், இதுரை 49 ஆயிரத்து 500 புகார்கள் வந்துள்ளன. போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்" என்றார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றம் அமைத்த குழுவுக்கு தலைமை வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி பதவி விலகியுள்ளார். இந்த நிதி நிறுவன மோசடி வழக்கில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். விசாரணை டிசம்பர் 4-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE