உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

By செய்திப்பிரிவு

கடலூர்: சிதம்பரம் வேங்கான் தெருவில் குரு நமச்சிவாயர் மடத்துக்கு சொந்தமான இடத்தில் விநாயகர், ஆத்ம நாதர், யோகாம்பாள், குரு நமச்சிவாயர், மாணிக்க வாசகர் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன.

இந்தக் கோயில் வளாகத்தில் வழிபாட்டுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்து, தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து 8 வீடுகளின் உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மீதமுள்ள 14 வீடுகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த ஜூலை 20-ம்தேதி ‘சீல்' வைத்து, வீட்டின் கதவுகளில் நோட்டீஸ் ஒட்டப் பட்டது. இந்நிலையில் 14 வீடுகளையும் அக்.31-ம் தேதிக்குள் இடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, கடலூர் மாவட்டம் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சந்திரன் மற்றும் செயல் அலுவலர்கள் சரண்யா, மஞ்சுளா உள்ளிட்டோர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வேங்கான் தெருவுக்கு வந்திருந்தனர். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகளுக்கும் அறநிலையத் துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நகர காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் பரணிதரன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் 14 வீடுகளையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு இடித்து, அகற்றும் பணி தொடங்கியது.

இந்த நிலையில் தில்லைக் காளியம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், நகர காவல் ஆய்வாளர் ஆறுமுகம், கொலை மிரட்டல் விடுத்து பணி செய்ய விடாமல் தடுத்ததாக அப்பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். தொடர்ந்து, சரவணனை கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்தனர். இந்த ஆக்கிர மிப்பு அகற்றத்தால் நேற்று அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE