தேனி | மணல் மேவிய தடுப்பணைகளால் நீர் சேகரிப்பில் பின்னடைவு

By என்.கணேஷ்ராஜ்

தேனி: நீர்வளத்துறை சார்பில் கட்டப்பட்ட பல தடுப்பணைகளில் மணல் மேவி விட்டதால் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் நீரை ஆங்காங்கே நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பயன்படுத்துவதற்காக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மலையடிவாரம், ஓடை, வாய்க்கால், ஆறுகள் என்று நீரோடும் இடங்களில் இதற்கான அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், பல தடுப்பணைகள் முறையாக பராமரிக்கப்படாததால் நீரில் அடித்து வரப்படும் மணல்கள், குப்பைகள் தடுப்பணையை மேவி விடுகிறது.

குறிப்பாக தேனி வீரப்ப அய்யனார் கோயில் மற்றும் பனசலாறு பகுதியில் இந்நிலை உள்ளது. தடுப்பணை மேவி விட்டதால் வரும் நீர் தேங்க வழியின்றி அப்படியே கடந்து செல்கிறது.

இதனால் மழை நீரை பயன்படுத்தி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திட்டத்தின் நோக்கமும் பூர்த்தியாகாத நிலை உள்ளது. ஆகவே பருவமழைக்கு முன்பாக இதுபோன்ற இடங்களை தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE