“பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் வன்முறை வெறியாட்டம்... வீடியோவை வெளியிட தயாரா?” - இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: “சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த காவல் துறை உயர் அதிகாரியும், முதல்வர் ஸ்டாலினும், பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து வீடியோ வெளியிடத் தயாரா?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரக்கர்கள், அசுரர்கள், கிங்கரர்கள் என்று புராணக் கதைகளில் கேள்விப்பட்டிருக்கிறோம். நாம் யாரும் அவர்களைக் கண்டதில்லை. அந்தக் குறையைப் போக்க ஆளும் திமுகவினர் அவதாரம் எடுத்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தி வருவது வேதனையின் உச்சமாகும். ஐந்து ஆண்டுகளுக்கு, தங்களுக்கு சேவை புரிய மக்கள் வாக்களித்தார்கள் என்பதை திமுகவினர் மறந்துவிட்டு, மாநிலமே தங்களுக்கு சொந்தமாகிவிட்டதுபோல் ஆட்டம் போடுவதும், அராஜகத்தில் ஈடுபடுவதும், அதை இவர்களுக்கெல்லாம் தலைவர் என்று மார்தட்டிக்கொள்ளும் மு.க. ஸ்டாலின் வேடிக்கை பார்ப்பதும் கடும் கண்டனத்துக்குரியது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (அக்.30), கல்குவாரிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போக்குவரத்து அமைச்சரின் உதவியாளர் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் என்ற பெயரில் சுமார் 300 குண்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்து கல்குவாரி டெண்டரை தங்களுக்கே தர வேண்டும் என்றும், திமுகவினரைத் தவிர வேறு யாரிடமும் ஒப்பந்தப் புள்ளி பெறக்கூடாது என்றும் மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்டதாக, அனைத்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன.

திமுகவினரின் கோரிக்கையை ஏற்க மறுத்த கனிம வளத்துறை உதவி இயக்குநர், அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் தாக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இந்த வன்முறையைத் தடுக்க வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி ஆய்வாளர் மற்றும் இதர காவலர்களையும் திமுக குண்டர்கள் தாக்கியதாகவும், ஒப்பந்தப் புள்ளி வழங்க வந்தவர்களை திமுகவினர் அடித்து விரட்டியதாகவும், இன்றைய நாளிதழ்களில் திமுகவினரின் அராஜகங்கள் புகைப்படத்துடன் வெளிவந்துள்ளன.

இத்தனை களேபரம் நடந்தும், காவல் துறை உயர் அதிகாரிகளோ, மாவட்ட ஆட்சியரோ சம்பவ இடத்துக்கு விரைந்து வராதது, இவர்களின் கைகள் ஆட்சியின் மேலிட கோமான்களால் கட்டப்பட்டுள்ளதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.சென்னையில் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபர் குறித்து வீடியோ வெளியிட்டு பேட்டி கொடுத்த காவல்துறை உயர் அதிகாரியும், பொம்மை முதல்வர் ஸ்டாலினும், பெரம்பலூரில் ஆளுங்கட்சியினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் குறித்து வீடியோ வெளியிடத் தயாரா?

``பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’’ என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த திராவக மாடல் ஆட்சியாளர்களின் கரங்களில் இன்றைக்கு தமிழகம் சிக்கி, மக்கள் அவதியுறுவது கொடுமையிலும் கொடுமை.‘சட்டமாகவும், சப்தமாகவும் பேசினால் மட்டும் போதாது; சட்டம் பொதுவானதாகவும், சப்தம் உண்மை உள்ளதாகவும் இருத்தல் அவசியம்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் அறிவுரையை, இந்த திமுக அரசின் முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவுபடுத்துகிறேன்.

30.10.2023 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க, காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் திமுக அரசின் பொம்மை முதல்வரை வலியுறுத்துவதோடு, திமுகவினர் அதிகார மமதையில் தொடர்ந்து வியாபாரிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை மிரட்டி அராஜகத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகிவிட்டது. இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அராஜகத்தில் ஈடுபட்டு வருபவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுகவுக்கு, வருகின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்