காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கரிமூட்டம்: விளாத்திகுளம் அருகே 250 ஆடுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: விளாத்திகுளம் அருகே புதூர் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தில் ரூ.3 லட்சம் மதிப்பிலான கரிமூட்டம் அடித்துச் செல்லப்பட்டது. கண்மாய் கரையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 250 ஆடுகளை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். புதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்கள், காட்டுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது.இதனால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.

கே.துரைச்சாமிபுரத்தில் லட்சுமணன் என்பவர் தயார் செய்து வைத்திருந்த கரிமூட்டத்தை வெள்ளம் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் தண்ணீர் வேகம் அதிகரிக்கவே, கரிமூட்டம் முழுவதும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும். தகவல் அறிந்து சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி.மார்க்கண்டேயன் கே.துரைச்சாமிபுரம் சென்று கரிமூட்டம் இருந்த இடத்தை பார்வையிட்டு, லட்சுமணனுக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.50 ஆயிரத்தை வழங்கினார்.

மேலும், அரசு சார்பில் நிவாரணம் கிடைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், ஊராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆடுகள் மீட்பு விளாத்திகுளம் அருகே வடமலாபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனக்கு சொந்தமான 250 ஆடுகளை, மாவிலோடை பெரிய கண்மாய் பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

நேற்று முன்தினம் மாலை பெய்த மழையால் காட்டாற்று வெள்ளம் கண்மாய்க்கு வரத்தொடங்கியது. திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால், சக்திவேல் தனது ஆடுகளுடன் கண்மாய்க்குள் இருந்த மேடான பகுதிக்கு சென்றார். சிறிது நேரத்தில் கண்மாய் நிரம்பியது. இதனால், கரைக்கு திரும்ப முடியாமல் ஆடுகளுடன் சக்திவேல் பரிதவித்தவாறு அங்கேயே அமர்ந்திருந்தார்.

இரவு நேரம் என்பதால் ஆடுகளுடன் அவர் கண்மாய் வெள்ளத்தில் சிக்கியிருந்தது யாருக்கும் தெரியவில்லை. நேற்று காலை இதை பார்த்த கிராம மக்கள் உடனடியாக விளாத்திகுளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான வீரர்கள் அங்கு விரைந்து வந்து, கண்மாய்க்குள் கயிறு கட்டி இறங்கி,சக்திவேலையும், 250 ஆடுகளையும் பத்திரமாக மீட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE