கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் இரு தரப்பினர் மோதல்: 13 பேர் கைது- பதற்றத்தை தணிக்க போலீஸ் குவிப்பு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், கல்வீச்சு தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில், ஒருதரப்பினர் மாரியம்மன் கோயில் கட்டி வருகின்றனர். இக்கோயில் பணிக்கான கிரானைட் கற்களை, ‘லேயிங்’ செய்வதாலும், கட்டிடப் பணி காரணமாக அங்கிருந்து பறக்கும் தூசிகள் அப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மற்றொரு தரப்பினருக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, தூசி படிவதைத் தடுக்க கோயில் கட்டும் பணி நடைபெறும் பகுதியில் துணிகளைக் கட்டி தடுப்புகள் அமைத்து பணியைத் தொடர அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை வலியுறுத்தினர்.
அப்போது, அங்கு வந்த கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சோக்காடி ராஜனுக்கும், துணியைக் கட்டச் சொன்னவர்களுக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த கிருஷ்ணகிரி இன்ஸ்பெக்டர் குலசேகரன் தலைமையிலான போலீஸார் அவர்களை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சோக்காடி ராஜனுக்கு ஆதரவாக ஊராட்சித் தலைவர் கொடிலா ராமலிங்கம் உள்ளிட்ட திரளானவர்கள், கோயில் பணிக்குத் துணியைக் கட்டச் சொன்னவர்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். இதில், இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கில் கொண்டதில், இருதரப்பைச் சேர்ந்த 10 பேர் காயம் அடைந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்திலிருந்த கூரைத் தடுப்புக்கு தீ வைத்தனர். இதனால், அங்கு பதற்றம் நிலவியது.

தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்பி சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான போலீஸார் இருதரப்பினரிடையேயான மோதலை தடுத்து, அமைதிப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினருக்கும் இடையில் நேற்று காலை அமைதி பேச்சு வார்த்தை நடந்தது. இதில், சுமுக நிலை எட்டவில்லை.

மேலும், கோயில் கட்டும் தரப்பினர் சோக்காடி-கிருஷ்ணகிரி சாலையில் நேற்று மதியம் மறியலுக்கு முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்எல்ஏ டில்லி பாபு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்டச் செயலாளர் மாதேஷ் ஆகியோர் தனித்தனியாக சோக்காடி கிராமத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

இதுதொடர்பாக சோக்காடி கிராமத்தை சேர்ந்த திம்மராஜ்(28) என்பவர் அளித்த புகாரின் பேரில், அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜன்(60), ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராமலிங்கம்(50), ஆனந்தன்(39), சித்தராஜ்(53), சித்தேவன்(44), சண்முகம்(40), சித்தராஜ்(55), 17 வயது சிறுவன், கண்ணன்(65), சுமதி உட்பட 10 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி வழக்குப்பதிவு செய்தனர். இதில், ராமலிங்கம், ஆனந்தன், சித்தராஜ், சித்தேவன், சண்முகம், 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

இதே போல், சித்தராஜ் அளித்த புகாரின் பேரில், அன்பரசு(30), முனிராஜ்(49), வரதராஜ்(51), குமரன்(23), சத்தியமூர்த்தி(27), செல்வம்(37), சுப்பிரமணி(42), திம்மராஜ்(28), சந்தோஷ்(27), ஆறுமுகம்(58), சிலம்பரசன்(34), தனுஷ்(24), கலையரசன்(32) உட்பட 13 பேர் மீது கிருஷ்ணகிரி அணை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், முனிராஜ், வரதராஜ், குமரன், சத்தியமூர்த்தி, செல்வம், சுப்பிரமணி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் 13 பேரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, அப்பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க டிஎஸ்பிக்கள் தமிழரசி, கணேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE