வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் கடந்த அக்.27-ம் தேதி தொடங்கின. இப்பணிகள் வரும் டிச.9-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி கடந்த அக்.27-ம் தேதி இக்காலகட்டத்தில் பொதுமக்கள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான திருத்தம் மேற்கொள்ள முடியும். இதுதவிர, பொதுமக்கள் வசதிக்காக, வரும் நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களும் தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளன. இதனிடையே வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடங்கிய நிலையில், இப்பணிகளை கண்காணிக்க, 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் மைதிலி ராஜேந்திரன், காஞ்சிபுரம, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலைக்கு சிட்கோ மேலாண் இயக்குநர் எஸ்.மதுமதி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூருக்கு ஜவுளித்துறை ஆணையர் எம்.வள்ளலார், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்துக்கு மீன்வள ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூருக்கு நில சீர்திருத்த துறை ஆணையர் என்.வெங்கடாசலம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறைக்கு வேளாண் ஆணையர் எல்.சுப்பிரமணியன், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கலுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல்லுக்கு தொழில்நுட்ப கல்வி ஆணையர் கே.வீரராகவராவ், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரத்துக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் இ.சுந்தரவள்ளி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரிக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண் இயக்குநர் இ.சரவணவேல்ராஜ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கண்காணிப்பு அதிகாரிகளுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் குறித்து, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை நடத்தினார். குறிப்பாக, 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான பணிகள், கல்லூரிகள், பொது இடங்களில் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இறந்தவர்கள், ஒருவர் பெயர் பல இடங்களில் இருந்தால் உரிய ஆவணங்களை பெற்று நீக்கம் செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இதையடுத்து, கண்காணிப்பு அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள மாவட்ட ஆட்சியர்கள், தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE