அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 காளைகளை அடக்கியது எப்படி? - ‘கார்’ பரிசு பெற்ற டிரைவர் பேட்டி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை ஒரே ஒரு காளையை மட்டும் அடக்கிய டிரைவர் ஒருவர், நேற்று ஒரே சுற்றில் 8 காளைகளை அடக்கி காரை பரிசாக பெற்று எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த காலங்களில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரருக்கும், காளைக்கும் ‘புல்லட்’ பைக்தான் விலை உயர்ந்த பரிசாக வழங்கப்படும். கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தால் பெற்ற வரவேற்பால் சிறந்த காளைக்கு கார் பரிசு வழங்கப்பட்டது. அந்த பரிசை இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் காளை தட்டிச் சென்றது.

அதனால், இந்த ஆண்டு செந்தில்தொண்டைமானின் காளை, பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று அலங்காநல்லூர் வாடிவாசலில் களம் கண்டது. ஆனால், வாடிவாசலை விட்டு நகராமல் சில நிமிடங்கள் நின்றது. அதன்பிறகே வெளியேறி மாடுபிடி வீரர்களை நோக்கி சீறிப் பாய்வதும், நாலாபுறமும் சுற்றி மிரள வைப்பதுமாக அருமையாக நின்று விளையாடியது.

விழா கமிட்டினரே இந்த காளையை பாராட்டினர். ஆனால், திட்டமிட்டப்படி குறிப்பிட்ட நேரத்தில் வாடிவாசலை விட்டு வெளியேறாததால் இந்தக் காளைக்கு கார் பரிசு கிடைக்கவில்லை. அதனால், சிறப்பாக வாடிவாசலில் நின்று விளையாடிய மிளகரணையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளை, இந்த முறை சிறந்த காளை பரிசை தட்டிச் சென்றது. காளையின் உரிமையாளர் சந்தோஷுக்கு ரெனால்ட் குவிட் கார் பரிசாக வழங்கப்பட்டது.

கனவிலும் நினைக்கவில்லை

அவர் நம்மிடம் பேசுகையில், ‘‘எனது காளை பாண்டியை சொந்த தம்பியாக நினைத்து வளர்த்து வருகிறேன். நான் இல்லாமல் பாண்டி சாப்பிட மாட்டான். பல வாடிவாசல்களை என்னோட காளை பார்த்துவிட்டது. ஏராளமான பரிசுகளையும் வாங்கிக் கொடுத்துள்ளது. ஆனால், இவ்வளவு பெரிய பரிசை (கார்) வாங்கிக் கொடுக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. பாரம்பரியமாக எங்கள் வீட்டில் தாத்தா, அப்பா, இப்போது நான் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம்.

எங்க தாத்தா, அப்பா காலத்தில் அவர்கள் வளர்த்த காளைகள் வாங்கிக் கொடுக்காத பேரை, என்னோட பாண்டி வாங்கிக் கொடுத்துள்ளான். எதிர்காலத்துல ஒரு கார் வாங்கணும்னு ஆசையா இருந்தது. அந்த ஆசையை என்னோட பாண்டி நிறைவேற்றி தந்தது எல்லையில்லா மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்றார்.

குடும்பத்தை காப்பாற்றுவேன்

அதுபோல, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நேற்று அதிகமான காளைகளை அடக்கிய அலங்காநல்லூரை சேர்ந்த எஸ்.அஜய்குமார் (22) சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஹூண்டாய் இயான் (ஐஓஎன்) ‘கார்’ பரிசாக வழங்கப்பட்டது. இவர் நேற்று முன்தினம் பாலமேட்டில் ஒரு காளையை அடக்கினர். அந்த காளை காலில் குத்தி கட்டு போட்டுள்ளார்.

அந்த காயத்துடனேயே அவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் இறங்கினார். கடைசி ரவுண்டில் இறங்கி 8 காளைகளை அடக்கி அலங்காநல்லூர் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டார். அஜய்குமார் ஐடிஐ படித்துள்ளார். தந்தை செல்வம். தாய் செல்வி. ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்.

அஜய்குமாருக்கு சரியான வேலை கிடைக்காமல் டிரைவர் வேலைக்கு சென்று வந்தார். ‘‘இப்போது சொந்தமாக கார் கிடைத்து விட்டது. இனி டிரைவராகி குடும்பத்தை காப்பாற்றுவேன், ’’ என்றார்.

காரும், பெயரும் கிடைத்தது

அஜய்குமார். அவர் நம்மிடம் பேசுகையில், ‘‘ரெண்டு மூனு வருடமாகத்தான் காளைகளை பிடிக்க கற்றுக் கொண்டேன். எனது குரு நாகராஜ் என்பவர்தான் காளையை எப்படி பிடிக்கணும்னு கற்றுத் தந்தார்.

எப்போதுமே நண்பர்களுடன் குழுவாகச் சேர்ந்த காளையை அடக்கும் பயிற்சியை செய்வோம். அலங்காநல்லூரில் ஒன்று, ரெண்டு காளைகளை பிடிச்சுடணும்னுதான் வந்தேன்.

ஜல்லிக்கட்டு களத்தில் குருநாதரின் பயிற்சியால்தான் இத்தனை காளைகளை அடக்க முடிந்தது. சொந்த ஊரிலேயே காளைகளை அடக்கி ஒரே நாளில் காரும், பேரும் கிடைத்தது. எனது நண்பர்களுக்கும், எனது குருவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்