மதுரை பிளஸ் 2 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

By கி.மகாராஜன் 


மதுரை: மதுரையில் பிளஸ் 2 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. ஏப். 5-ல் விடைத்தாள் திருத்தப்பட்ட போது மதுரையில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய இரு மாணவர்களின் விடைத்தாள்கள் ஒரே மாதிரியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து விசாரிக்கப்பட்ட போது அந்த இரு மாணவர்களும் ஒரு பாடத்தில் முழு மதிப்பெண் பெற்றது தெரியவந்தது. முழு மதிப்பெண் பெற்ற அந்த மாணவர்கள் பழங்காநத்தத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருவதும், அடுத்தடுத்த பதிவெண் கொண்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவருக்கு, தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தேர்வை ரத்து செய்து, ஏன் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அரசு தேர்வுகள் இணை இயக்குநர் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மாணவரின் தந்தை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, காவல் துணை ஆணையர் தலைமையில் சிறப்புக்குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. வழக்கு மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் விசாரித்துள்ளனர். தற்போது வரை புகார் வரவில்லை. காவல் நிலையத்திலும் வழக்கு புதிவு செய்யவில்லை. இருப்பினும் மாணவனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இந்த வழக்கை மதுரை குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றலாம் என்றார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: முறைகேடு நடைபெற்று 6 மாதமாகியும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் அரசுத் தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. அரசு தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவது சமுதாயத்தை பாதிக்கும். மாணவர்கள் தேர்வு முறைகேட்டில் ஈடுபடுவதை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாணவர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டாரா இல்லையா என்பது குறித்து அரசு தேர்வுகள் இயக்கக இணை இயக்குநர் விசாரணை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த முறைகேடு புகார் குறித்து அரசுத் தேர்வு இணை இயக்குநர் உடனடியாக மதுரை மாநகர குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பின்னர் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். விசாரணை அறிக்கையை 6 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE