தெற்கு ரயில்வேயில் ஓடும் வந்தே பாரத் ரயில்கள் 35 முதல் 49 வயதினர் அதிக அளவில் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: தெற்கு ரயில்வேயில் ஓடும் வந்தே பாரத் ரயில்களில் 35 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பயணிகள் அதிக அளவில் பயணிப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. வந்தே பாரத் ரயில்களை வணிகம்,வேலைக்கு செல்பவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவற்றில், தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர், திருவனந்தபுரம் - காசர்கோடு (வழி-கோட்டயம்),

சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, திருநெல்வேலி - சென்னை எழும்பூர், திருவனந்தபுரம் - காசர் கோடு (வழி-ஆலப்புழா) என தலா ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனிடையே, தெற்கு ரயில்வேயில் ஓடும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில், 35 முதல் 49 வயதுக்குட்பட்ட பயணிகள் அதிக அளவில் வந்தே பாரத் ரயிலில் பயணிப்பதாக தெரிய வந்துள்ளது. வணிகர்கள், வேலைக்காக செல்பவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் வந்தே பாரத் ரயில்களை அதிகம் விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது. நவீன வசதி, தரமான சேவை ஆகியவையே இதற்கு முக்கியக் காரணமாகும்.

சென்னை எழும்பூர் - திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் 77 சதவீதம் பேர் குடும்பத்துடனும், 16 சதவீதம் பேர் வணிக நோக்கத்துக்காகவும் பயணம் செய்துள்ளனர். மேலும், இந்த ரயிலில் 35 முதல் 49 வயது வரை உள்ளவர்கள் 36 சதவீதம் பேர் பயணம் செய்கின்றனர்.

கோவை - சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் குடும்பத்துடன் 71 சதவீதம் பேரும், வணிக நோக்கத்துக்காக 11 சதவீதம் பேரும், சுற்றுலாவுக்காக 7 சதவீதம் பேரும் பயணித்துள்ளனர். 25 முதல் 34 வயது வரை உள்ள 21 சதவீதம் பேர் பயணிக் கின்றனர், சென்னை சென்ட்ரல் - விஜயவாடா வந்தே பாரத் ரயிலில் குடும்பத்துடன் 36 சதவீதம் பேர் பயணிக் கின்றனர்.

வணிக நோக்கத்துக்காக 22 சதவீதம் பேரும், சுற்றுலாவுக்காக 20 சதவீதம் பேரும், 35 முதல் 49 வயது வரை உள்ளவர்கள் 37 சதவீதம் பேரும் பயணிக்கின்றனர். சென்னை சென்ட்ரல் - மைசூரு வந்தே பாரத் ரயிலில் குடும்பத்துடன் 42 சதவீதம் பேரும், வணிகத்துக்காக 37 சதவீதம் பேரும், சுற்றுவாவுக்காக11 பேரும் பயணிக்கின்றனர். இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

கூடுதல் பெட்டிகள்: சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ரயிலில் நாள்தோறும் எல்லா இடங்களும் நிரம்பிவிடுகின்றன. தேவை அதிகரித்துள்ளதால், இந்த ரயிலில் 2 முதல் 4 பெட்டிகள் கூடுதலாக சேர்க்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE