தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள சிலைக்கு மரியாதை

By செய்திப்பிரிவு

மதுரை: முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தியை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கள்கிழமை) காலை 8 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து சிலைக்கு கிழே வைக்கப்பட்டு இருந்த முத்துராமலிங்க தேவரின் உருவ படத்துக்கும் முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிசாமி தியாகராஜன், கீதா ஜீவன், பி.மூர்த்தி, பெரியகருப்பன் உள்ளிட்டோர், திமுக நிர்வாகிகளும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு, மதுரை கோரிப்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கவும், அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் இன்று அவர் அந்தத் திட்டப் பணிகளுக்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின் மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருது சகோதரர்கள் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, பசும்பொன்னில் இன்று நடைபெறும் அரசு விழாவில், முதல்வர் ஸ்டாலின் காலை 10.30 மணிக்கு தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார். அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன். தங்கம் தென்னரசு, உதயநிதி, ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், பி.மூர்த்தி, அர.சக்கர பாணி, பழனிவேல் தியாகராஜன், கே.ஆர்.பெரியகருப்பன், பெ.சுவாமி நாதன், பெ.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE