ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணம்: 300 பேரை அழைத்துச் செல்ல அறநிலையத் துறை முடிவு

By செய்திப்பிரிவு

சென்னை: ராமேசுவரம் - காசி ஆன்மிகப் பயணத்தில் 300 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க நவ. 20-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2022-2023-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து, காசி விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு 200 பேர் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவர் என்றும், இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 200 பேர் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டுக்கான அறிவிப்பில் ‘ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாத சுவாமிகோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக 300 பேர் அழைத்துச் செல்லப்படுவர், அதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசே ஏற்கும்’ என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஆன்மிகப் பயணம் செல்ல அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், தலா 15 பேர் வீதம் மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில்பெற்று கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன், அதே அலுவலகத்தில் நவம்பர் 20-ம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்துக்கு தேர்வு செய்யப்படுவர். கூடுதல் விவரங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE