இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் கற்கள், மதுபாட்டில்களை வீசிய 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கற்கள், மதுபாட்டில்களை வீசிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என நிர்வாகிகளுக்கு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென ஒரு கல் வந்து விழுந்தது.

சிறிது நேரம் கழித்து மீண்டும் ஒரு பெரிய கல் அங்கிருந்த அலுவலக ஊழியர்கள் அருகே வந்து விழுந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், கற்களை வெளியே வந்து பார்த்தனர். அப்போது காலி மதுபாட்டில்களை மர்ம நபர்கள் மறைந்திருந்து அலுவலகத்துக்குள் எறிந்துள்ளனர்.

உடனே அலுவலக காவலாளி சுதாகர், தென் சென்னை மாவட்ட செயலாளர் சிவாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மாம்பலம் போலீஸில் சிவா புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவ இடத்துக்கு வந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கட்சி அலுவலகத்துக்குள் கற்கள் மற்றும் காலி மதுபாட்டில்களை வீசியது, டாக்டர் தாமஸ் சாலையில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கும், அலெக்ஸ் (22), பாரதிராஜா (20), நாகராஜ் (22) மற்றும் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த பார்த்திபன் (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘கட்சி அலுவலகத்தில் முருங்கை மரம் ஒன்று இருக்கிறது. அந்த மரத்தில் இருந்து கம்பளி பூச்சிகள், பாலன் இல்லத்தின் பின்புறம், டாக்டர் தாமஸ் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்குள் செல்வதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, குடியிருப்புவாசிகள் கேட்டுக்கொண்டதால், அலுவகத்தில் இருந்த முருங்கை மரத்தை வெட்டி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதன் அருகில் உள்ள செடிகளில் இருந்து பூச்சிகள் வருவதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த 4இளைஞர்கள் கற்கள் மற்றும் மதுபாட்டில்களை மதுபோதையில் அலுவலகத்துக்குள் எறிந்துள்ளனர். பின்னர், காவலாளி சுதாகருடன் தகராறில்ஈடுபட்டுள்ளனர். தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’ என்றனர். இதனால்அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக விரோதிகளின் சட்டவிரோத செயல் கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதல் தொடர்பாக காவல் துறையில் புகார்செய்ததும், போலீஸார் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டனர். அதே சமயம் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட செய்தி வெளியானதும் கட்சி அமைப்புகளும், அணிகளும் கண்டன இயக்கங்களில் ஈடுபட தொடங்கினர்.

இதற்கிடையில் காவல் துறையின் தீவிர நடவடிக்கையால் 6 பேர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். சட்டம் - ஒழுங்கை நிலை நாட்டுவதில் காவல்துறையின் நடவடிக்கை, வெளிப்படையாகவும் முனைப்பாகவும் அமைந்திருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். எனவே, கட்சி அமைப்புகளும், அணிகளும் இது தொடர்பாக போராட்டங்களில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் கண்டனம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தி.க. தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE