“திமுக கையெழுத்து இயக்கத்தால் நீட் ரத்தானால் அரசியலை விட்டு விலகத் தயார்” - திண்டுக்கல் சீனிவாசன் சவால்

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: “திமுகவினர் கையெழுத்து இயக்கம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால், நான் அரசியலை விட்டு விலகத் தயார்” என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எரியோட்டில் அதிமுக 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று (அக்.27) நடைபெற்றது. எரியோடு பேரூர் கழக செயலாளர் அறிவாளி தலைமை வகித்தார். மாநில இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி, தலைமை கழக பேச்சாளர் அம்புஜம் கலந்து கொண்டனர். இதில் அதிமுக மாநில பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியது: “திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நூறு சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என கூறினார்கள். ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை நீட் தேர்வை ரத்து செய்யாதது ஏன்? பேனா கிடைக்கவில்லையா?. தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்றமும் நீட் தேர்வு கட்டாயம் என்று கூறியுள்ளது. 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கி யாருக்கு அனுப்ப போகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் செயல்.

கையெழுத்து இயக்கம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால் நான் அரசியலை விட்டு விலகத் தயார். ஏமாற்றுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? தமிழகத்தில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என்று இரண்டு முதல்வர்கள் உள்ளனர். அறிவிக்கப்படாத முதல்வராக சபரீசன் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் குடும்ப ஆட்சி தான் நடக்கிறது. ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் பேசியதில் என்ன தவறு உள்ளது. ஆனால், ஆளுநரை திமுகவினர் இழிவுப்படுத்துகின்றனர்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. திமுக எனும் தீய சக்தியை ஒழிப்பது, மக்களுக்கு நன்மை செய்வதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்பது தான் எங்கள் நோக்கம். இந்தியாவிலேயே அதிக கடன் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. காவிரி பிரச்சினையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவான முடிவு எடுக்கவில்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE