“அமித் ஷாவின் புதிய அஸ்திர அறிவிப்பை தெலங்கானா மக்கள் புரிந்துகொள்வர்” - கீ.வீரமணி கருத்து

By செய்திப்பிரிவு

சென்னை: “தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்து ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை முதல்வராக்குவோம்’ என்று ஒரு புதிய அஸ்திர அறிவிப்புத் தூண்டிலைத் தூக்கி அரசியல் மீன் பிடிக்க திட்டமிட்டு அறிவித்துள்ளார். இதனைத் தெலங்கானா மக்கள் புரிந்து வைத்துள்ளனர்” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”நடக்கவிருக்கும் ஐந்து மாநிலத் தேர்தல்களில் பா.ஜ.க. மீண்டும் அந்த மாநிலங்களில் வெற்றி பெறுவது சந்தேகமே என்ற உண்மை நாளுக்கு நாள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டது. பிரதமர் மோடி, தேர்தல் பிரச்சாரத்துக்குச் சென்றால் வாக்குகள் கண்டிப்பாகக் கிடைக்கும். ஆகவே, அவரை முன்னிலைப்படுத்தினால் வெற்றி என்ற தொடக்கக் காலத்தில் (10 ஆண்டுகளுக்கு முன்) பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கணக்கில் நிலவிய எண்ணம் இப்போது குறிப்பாக கர்நாடக மாநில தேர்தலுக்குப் பிறகு தலைகீழாக மாறி வருகிறது.

வெற்றி பெற முயற்சிகள் செய்யும் வகையாக பல புதிய உத்திகள், வியூகங்களை வகுக்கவேண்டிய கட்டாயம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க தேர்தல் குழுவினருக்கும், பிரதமர் மோடி, அமித் ஷா போன்றவர்களுக்கும் உண்டாகிவிட்டது. நாளுக்கு நாள் பளிச்சென தெரிய ஆரம்பித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவரும், அதன் செயலாளரும் இப்போதுதான் சமூக நீதி - இடஒதுக்கீடு, ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்காகக் கசிந்துருகி, 'கிளிசரின்' கண்ணீர் விடும் காட்சி நாள்தோறும் அரங்கேறுகிறது. 2000 ஆண்டுகளாக சாதியால் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களைப் பற்றி திடீர் கவலை அவர்களுக்கு வந்துவிட்டது.

இதே தலைவர்கள்தான், கட்சிதான் மண்டல் கமிஷன் பரிந்துரைகளில் முழுவதும்கூட அல்ல - பாதி, ஒன்றிய அரசு பணிகளில் - வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை - சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்தியதற்காகவே பத்தே மாதங்களில் அவரது ஆட்சியைக் கவிழ்த்ததோடு, மண்டலுக்குப் பதில் இதோ கமண்டலைத் தூக்குகிறோம் என்று ரத யாத்திரை நடத்தி, அந்த சமூக நீதியை ஒழிக்கப் போர்க்கொடி தூக்கியவர்கள். இன்று சமூக நீதி பேசுகிறார்கள் .சாதி - தீண்டாமை பற்றி மிகவும் கண்டனக் குரல் எழுப்புவது என்ற பாசாங்குத்தனத்தை மிகப் பக்குவமாகச் செய்து, அப்பாவி ஒடுக்கப்பட்ட மக்கள் கண்ணில் மண்ணைத் தூவி, அவர்கள் கையில் உள்ள வாக்கினைப் பறிக்க முயலுகின்றனர்.

வரும் தெலங்கானா தேர்தலில் போட்டியே காங்கிரஸுக்கும், பி.ஆர்.எஸ். கட்சிக்கும் இடையில்தான் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பே இல்லை என்று செய்திகள் பரவலாக வரும் நிலையில், அங்கே தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'நாங்கள் வெற்றி பெற்றால், அடுத்து ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரை முதலமைச்சராக்குவோம்' என்று ஒரு புதிய அஸ்திர அறிவிப்புத் தூண்டிலைத் தூக்கி அரசியல் மீன் பிடிக்க திட்டமிட்டு அறிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி, 'உங்களில் எத்தனைப் பேர் எஸ்.சி (ஆதிதிராவிடர்), எத்தனை பேர் எஸ்.டி (பழங்குடியினர்), எத்தனை பேர் ஓ.பி.சி. (பிற்படுத்தப்பட்டோர்) கையை உயர்த்துங்கள்' என்று கேட்டபின், ஒருவர் கூட கையை உயர்த்தாத நிலையில், சமூக அநீதி எப்படி இந்த பாஜக ஆட்சி அதிகார மையத்தில் கொடிகட்டிப் பறக்கிறது என்பதற்கு ஒரு புள்ளி விவரம் கூறி அசர வைத்துள்ளார். அரசின் 90 முக்கியத் துறை செயலாளர்களில் வெறும் மூன்றே மூன்று பேர்தான் பிற்படுத்தப்பட்டவர் (ஓ.பி.சி.) என்று கூறியுள்ளார். இதுதான் பாஜக அரசின் சமூக நீதிக்கான செயல்பாடா என்ற கேள்வியின் நியாயத்தை எவரே மறுக்க முடியும்.

தேர்தலில் வெற்றி பெற எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. ஆகிய ஒடுக்கப்பட்டோர் ஓட்டுகள் தேவை என்பது இப்போது புரிவதால், 'நாங்கள் வெற்றி பெற்றால் முதலமைச்சராக ஒரு பிற்படுத்தப்பட்டவரை தேர்வு செய்வோம்' என்று புதிய வித்தை காட்டி, வரும் தோல்வியிலிருந்து தப்பிக்க, சமூக நீதி என்ற தெப்பத்தைத் தேடி, முகமூடியை அணிந்து, வேஷம் கட்டி வருகின்றனர். இதனைத் தெலங்கானா மக்கள் புரிந்து வைத்துள்ளனர். சிறுபான்மையின மக்களும் உறுதியாக நின்று, மதவாத பாஜக ஆட்சிக்குப் பாடம் கற்பிப்பார்கள்" என்று கீ.வீரமணி தெரிவித்திருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்