தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், வரும் 31-ம் தேதியும் சில இடங்களிலும், 29, 30-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், நவ.1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

இன்று (அக். 28) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். நாளை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 30-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் ராமநாதபுரம், தேனி, நீலகிரி, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 78 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும்.

அக். 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு, குருந்தன்கோடு, பூதப்பாண்டி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், சுருளக்கோடு ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE