நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்: குடியரசு தலைவரிடம் முதல்வர் மனு

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே ஒப்புதல் அளிக்குமாறு சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் டெல்லி திரும்பினார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஓராண்டுக்கும் மேலாகநிலுவையில் உள்ள, தமிழ்நாடுஇளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை(நீட் விலக்கு) மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க கோரி அவரிடம் மனுவை வழங்கினார். அதில் முதல்வர் கூறியுள்ளதாவது:

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது, ஏழை மற்றும் பின்தங்கியவகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக உள்ளது. அவர்களை கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் மூலம் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது.

இந்த சூழலில், நீட் தேர்வைமத்திய அரசு அறிமுகம் செய்ததாலும், அதைத் தொடர்ந்து மத்திய சட்டங்களில் செய்யப்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாகவும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடந்த சேர்க்கை முறையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

நீட் தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்து, மாற்று வழிகளை செயல்படுத்த தேவையான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுஅமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் அடிப்படையிலும், பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டும், சட்டப்பேரவையில் கடந்த 2021 செப்.13-ம்தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு செப்.18-ம் தேதி அனுப்பப்பட்டது. ஆளுநர் 5 மாதங்களுக்கு பிறகு, மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

சட்டப்பேரவையில் 2022 பிப்.8-ம் தேதி மீண்டும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா, ஆளுநரால் மத்திய உள்துறைஅமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.

மசோதா தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், ஆயுஷ், சுகாதார அமைச்சகங்கள், மத்திய உயர்கல்வித் துறை ஆகியவை கோரிய அனைத்து விளக்கங்களும் உள்துறை அமைச்சகத்துக்கு உரிய காலத்துக்குள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால், இனியும் தாமதிக்காமல் நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி குடியரசுத் தலைவருக்கு கடந்தஆக.14-ம் தேதி கடிதம் எழுதினேன். மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய கேள்விகளுக்கு பதில் அளித்தும், துரதிர்ஷ்டவசமாக, மசோதாவுக்கு ஒப்புதல் தரப்படவில்லை.

தமிழகத்தின் பரந்துபட்ட சட்டப்பேரவை, அரசியல் மற்றும் சமூக ஒருமித்த கருத்தின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்பட்டுள்ள அதீத தாமதம், அதிக கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாத, பலதகுதிவாய்ந்த மாணவர்களின் மருத்துவ சேர்க்கையைபறித்துள்ளது. உணர்வுப்பூர்வமான இப்பிரச்சினையில் தாங்கள் உடனே தலையிட்டு, நீட்விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர வேண்டும்.

இவ்வாறு அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE