வணிக வரித்துறை சார்பில் மதுரை, சென்னை, கோவையில் சமாதான் திட்ட விளக்க கூட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: வணிக வரித்துறை அறிவித்துள்ள வணிகர்களுக்கான சமாதான் திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் மதுரை, சென்னை, கோவையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து வணிகவரி ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சார்பில் வணிகர்கள், நிறுவனங்கள் மற்றும் வணிக வரித்துறை இடையிலான நிலுவைகளை தீர்வு செய்தல் தொடர்பான சமாதான் திட்டத்தை முதல்வர் சமீபத்தில் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த சமாதான் திட்டத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில், அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், சமாதான் திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், வணிகவரித்துறை செயலர் பா.ஜோதி நிர்மலாசாமி, வணிக வரி ஆணையர் டி.ஜகந்நாதன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விருதுநகர் கோட்டங்களை சார்ந்த வணிகர்களுக்கு அக்.31-ம் தேதி காலை 10 மணி முதல் மதுரை பாண்டிகோவில் அருகில் உள்ள துவாரகா பேலஸ் அரங்கில் கூட்டம் நடைபெறுகிறது.

இதையடுத்து, சென்னை (வடக்கு), சென்னை (தெற்கு), சென்னை (மத்தியம்), காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர் கோட்டத்தை சார்ந்த வணிகர்களுக்கு நவ.6-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெறும். அதேபோல, கோயம்புத்துர், சேலம், ஈரோடு, திருப்பூர், ஓசூர் கோட்டத்தை சார்ந்த வணிகர்களுக்கான விளக்கக் கூட்டம், நவ.7-ம் தேதி காலை 10 மணிக்கு கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் சமாதான் திட்டத்தின்கீழ் பயனடைய உள்ள சம்பந்தபட்ட பகுதிகளைச் சார்ந்த வணிகர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE