அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்க பஸ் கட்டண உயர்வு மட்டுமே தீர்வல்ல; ஊழலற்ற திறமையான நிர்வாகம் இல்லாவிட்டால் இதேநிலைதான் தொடரும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு பஸ்களில் சராசரியாக 60 சதவீதம் வரையில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டீசல் மற்றும் உதிரி பாகங்களின் விலை உயர்வு, இயக்க செலவு, ஊழியர்களின் சம்பள உயர்வு ஆகியவற்றால் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், போக்குவரத்து கழகங்களில் புதிய பஸ்கள் வாங்குவது, உதிரி பொருட்கள் கொள்முதல், ஊழியர்கள், அதிகாரிகள் நியமனங்களில் முறைகேடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலேயே இத்துறையில் நஷ்டம் ஏற்படுவதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஊழலற்ற நிர்வாகம்
இதுகுறித்து போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நிர்வாக இயக்குநர்களிடம் கேட்டபோது, ‘‘இந்த கட்டண உயர்வு மட்டுமே போக்குவரத்து கழகங்களை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லாது. ஊழலற்ற நிர்வாகம் கட்டண உயர்வை விட முக்கியமானது. புதிய பஸ்கள் வாங்குவது, உதிரி பொருட்கள் வாங்குவது, தொழிலாளர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரையிலான நியமனத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, லாபகரமாக இயக்கப்படும் ஆயிரக்கணக்கான வழித்தடங்களை தனியார் பஸ்களுக்கு விட்டுக் கொடுப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
தனியார் பஸ்களுக்கு ஆதரவாக செயல்பட்டு முறைகேடாக சம்பாதிக்கும் சில போக்குவரத்து அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தனியார் பஸ்களுக்கு வழித்தடங்களை கொடுப்பதில், உள்ளூர் அரசியல் நிர்வாகிகளின் தலையீட்டைக் கட்டுப்படுத்த வேண்டும். போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமாக உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் முறையாக திட்டமிட்டு, வணிக பயன்பாட்டுக்கு உட்படுத்தினால், நல்ல வருவாயை பெற முடியும். 15 நிர்வாக இயக்குநர்கள், 80 பொதுமேலாளர்கள், 120 துணை மேலாளர்கள் என போக்குவரத்து துறையில் உயர் அதிகாரிகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைக் குறைத்தாலே கணிசமான அளவுக்கு செலவையும் குறைக்க முடியும். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பல ஆயிரம் கோடி என நஷ்டத்தையே கணக்கு காட்ட வேண்டிய நிலைதான் ஏற்படும்’’ என்றனர்.
7,500 பஸ்கள் தேவை
அரசு போக்குவரத்து கழகங்களை மேம்படுத்துவது குறித்து சென்னை ஐஐடி பேராசிரியர் கீதகிருஷ்ணன், ‘தி இந்து’விடம் கூறும்போது, “சென்னையில் மாநகர பஸ்களின் தேவை அதிகரித்துள்ளது. அதாவது, சுமார் 7,500 பஸ்கள் தேவைப்படுகின்றன. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைக்கவும் பொதுபோக்குவரத்தை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சொந்த மற்றும் இதர வாகனங்களை பயன்படுத்துவோரிடம் இருந்து கணிசமான அளவுக்கு வரி விதித்து, அந்த தொகையை பொதுபோக்குவரத்து மேம்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். மக்கள் ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதியை பெற (பஸ், ரயில், மெட்ரோ ரயில்) ஸ்மார்ட் அட்டை வசதியை கொண்டு வரலாம்.
போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமாக உள்ள இடங்களில் அவர்களே வாகன நிறுத்துமிடங்கள் அமைத்து, அதன் மூலம் கட்டணம் வசூலிக்கலாம். அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சொந்தமான இடங்களில் அடுக்குமாடிகளை அமைத்தும், பஸ் நிலையங்களில் விளம்பரம் செய்வதன் மூலமும் வருவாய் ஈட்டி வரும் காலங்களில் மக்கள் மீதான கட்டண உயர்வு சுமையை குறைக்க முடியும்” என்றார்.
முத்தரப்பு குழு
சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பு செயலாளர் வி.ராமாராவ் கூறும்போது, ‘‘ஒரே நேரத்தில் அதிக அளவில் கட்டண உயர்வு ஏற்படும்போது மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், ஆண்டு தோறும் பஸ் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு தற்போது அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசு, நிர்வாகம், மக்கள் தரப்பு (பயணிகள் நலச்சங்கங்கள்) ஆகியோரைக் கொண்டு ஒரு முத்தரப்பு குழுவை அமைத்து இதற்கு நீதிபதியை தலைமையாக கொண்டு செயல்பட வேண்டும். இந்த குழு மக்களிடமும் கருத்து கேட்டு இறுதி செய்த பிறகே கட்டண உயர்வை அரசு முடிவு செய்ய வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago