மறைமலை நகர்: மறைமலை நகர் நகராட்சியில் ரூ.5.85 கோடியில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை முதல்வர் திறந்து வைத்து 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் நகராட்சி காந்தி நகர் பகுதியில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.5.85 கோடி செலவில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.
இதற்கு மறைமலை அடிகளார் சமுதாயக்கூடம் என பெயர் சூட்டி, கடந்த ஏப்.29-ல் காணொலி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சமுதாயக்கூடம் ஒரு ஏக்கர் பரப்பளவில், 600 பேர் அமரும் வசதி கொண்ட நிகழ்ச்சி மண்டபம், 300 பேர் உணவருந்தும் வகையில் உணவு கூடம், மணமகன் மற்றும் மணமகள் அறைகள், விருந்தினர் அறைகள், சமையலறை மற்றும் சமையல் பொருள் இருப்பு அறை, வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. எனினும், கடந்த 6 மாதங்களாக இந்த சமுதாயக்கூடம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டி கிடக்கிறது.
முதல்வர் திறந்து வைத்த இந்த சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வராததால், சுற்றுப்பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு தனியார் மண்டபங்களை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சமுதாயக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கூறியதாவது: பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சமுதாயக்கூடம், 6 மாதங்களாக மூடியே கிடக்கிறது. இதனால், கட்டிடம் பராமரிப்பின்றி பாழாகி வருகிறது. மேலும், கட்டிடத்தின் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கூடம் மூடியே கிடப்பதால், பொதுமக்கள் சார்பில் பிறந்தநாள், காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, திருமண நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மூடிக் கிடக்கும் சமுதாயக்கூடத்தை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
» திமுக 50 கோடி கையெழுத்து பெற்றாலும் நீட் தேர்வை ஒழிக்கவே முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
முதல்வர் திறந்து வைத்த கட்டிடம், 6 மாதங்களாகியும் நடைமுறைக்கு வராமல் இருக்கும் சூழல்தான், மறைமலை நகர் நகராட்சியின் தற்போதைய நிலை என பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து மறைமலை நகரை சேர்ந்த மெய்யப்பன் கூறியது: ஏழைகள், நலிவடைந்தவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காகதான், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், மாவட்டத்தின் பல பகுதிகளில் சமுதாயக்கூடங்களை அமைத்துள்ளன.
அதேபோல் மறைமலை நகரில் தனியாருக்கு நிகராக சமுதாயக்கூடம் கட்டி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால், திருமணங்கள் உட்பட பல்வேறு வீட்டு விசேஷ நிகழ்ச்சிகளை, நடத்துவதற்கு பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும். கட்டி முடித்து பல மாதங்கள் ஆகியும், இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. கூடுதல் வசதி செய்கிறோம் என நகராட்சி நிர்வாகம், ஏசி, இருக்கை வசதிகளை செய்து வருகிறது.
ஆனால் ஒரே மாதத்தில் முடிக்க வேண்டிய பணியை பல மாதங்களாக இழுத்தடிப்பது சரியில்லை. இதனால் பொதுமக்கள் தனியார் திருமண மண்டபங்களை நாடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டப்படும் சமுதாயநலக் கூடங்கள், ஒரு சிலரின் அலட்சியத்தால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் வீணடிக்கப்படுகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக சமுதாய கூடத்தில் அனைத்து பணிகளையும் முடித்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து மறைமலர் நகர் நகராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மண்டபத்துக்குள் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் நகராட்சி சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் ஃபால் சீலிங், குளிர்சாதன வசதி, டேபிள் சேர், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்பட உள்ளது.
தற்போது பணிகள் நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு மாதத்தில் ௮னைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். மேலும், முதல்வர் திறந்து வைத்தாலும் சமுதாயக்கூடத்தை நிர்வகிப்பதில் நகராட்சிக்கும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்க காலதாமதம் ஏற்பட்டதால் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago