சென்னை: "நான் மத்திய அரசை, மத்திய அரசின் பொறுப்பில் இருக்கக் கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, தயவுசெய்து இங்கிருக்கும் ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றிவிடாதீர்கள். இந்த மக்களவைத் தேர்தல் வரைக்குமாவது கொஞ்சம் இருக்கட்டும். எங்களுக்கு அதில் பல சவுரியங்கள் இருக்கிறது" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் திமுக வழக்கறிஞர் புருஷோத்தம் இல்லத் திருமண விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "முதன்முதலில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் அடிப்படையில் வழங்க வேண்டும் என்று கூறியபோது, எந்த மாநிலமும் அதை நிறைவேற்றுவதற்கு முன்வரவில்லை. அதை நிறைவேற்றிய முதல் மாநிலம் தமிழகம்தான். கருணாநிதி முதல்வராக இருந்தபோது அது நிறைவேற்றப்பட்டது. ஆனால், இன்றைக்கு 40 சதவீதம். பெயருக்குத்தான் 40. ஆனால், தற்போது 50-க்கும் மேலாக இருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால், உள்ளாட்சியில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதை மகிழ்ச்சியுடன் கூறுகிறேன். இதுதான் திராவிட மாடல்.
இன்று யார் யாரோ கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொண்டு. அந்தப் பதவி என்பதே வேஸ்ட். அதுவும் பெரிய பெரிய மாளிகையில் உட்கார்ந்து கொண்டு திராவிடம் என்றால் என்ன, திராவிடம் என்றால் என்ன என்று கேட்டு வருகின்றனர். இப்போது நடந்திருக்கிறதே இந்த திருமணம், இதுதான் திராவிடம். திராவிடம் என்றால் என்ன என்று உங்களை கேட்க வைத்திருக்கிறதே அதுதான் திராவிடம். இப்போது இரண்டு நாட்களாக அவர் என்ன மாதிரியான புருடாவெல்லாம் விட்டுக்கொண்டிருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். என்னைப் பொறுத்தவரைக்கும், அந்த புருடாவெல்லாம் விடுகிறாரே, திராவிடம் என்றால் என்று கேட்கிறாரே அவர் தொடர்ந்து இருக்க வேண்டும். அவர் இருப்பது, நமது பிரச்சாரத்துக்கு வலுவை சேர்த்து வருகிறது.
நான் மத்திய அரசை, மத்திய அரசின் பொறுப்பில் இருக்கக்கூடிய பிரதமரை, உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித் ஷாவை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, தயவுசெய்து இங்கிருக்கும் ஆளுநரை மட்டும் என்றைக்கும் மாற்றிவிடாதீர்கள். இந்த மக்களவைத் தேர்தல் வரைக்குமாவது கொஞ்சம் இருக்கட்டும். எங்களுக்கு அதில் பல சவுரியங்கள் இருக்கிறது.
» திமுக 50 கோடி கையெழுத்து பெற்றாலும் நீட் தேர்வை ஒழிக்கவே முடியாது: பிரேமலதா விஜயகாந்த் கருத்து
ஆளுநர் ஏதாவது பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், மக்கள் யாரும் அதை பொருட்படுத்தவில்லை. மக்கள் அவரது பேச்சை அசட்டை செய்துவரும் சூழ்நிலையைத்தான் பார்க்கிறோம். இன்றைக்கு சமூக ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் செய்திகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்தச் சூழலில்தான் திமுக ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்தோமோ, அதையெல்லாம் நிறைவேற்றி வருகிறோம்.
இன்றைக்குக் கருத்துக்கணிப்பு வரக்கூடிய சூழ்நிலை எல்லாம் பார்க்கிறபோது, எப்படி தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய வெற்றியைக் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றோமோ, அதேபோல் வட மாநிலத்தில் நடைபெற இருக்கக்கூடிய 5 மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக, உறுதியாக இண்டியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
மோடி தலைமையில் ஆண்டு கொண்டிருக்கக்கூடிய ஒன்றிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. 2024-ல் நடைபெறவிருக்கக் கூடிய நாடாளுமன்ற தேர்தலுக்கு நீங்கள் எல்லாம் தயாராக இருக்கவேண்டும், தயாராக இருக்கவேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
மணமக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்... தமிழ்நாட்டில் இருக்கிறோம், தமிழர்களாக வாழ்கிறோம், தமிழுக்காகவே போராடுகிறோம், தமிழுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே, உங்களுக்குப் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர்களை சூட்டுங்கள், சூட்டுங்கள் என்று அன்போடு கேட்டு, அன்போடு மட்டுமல்ல, உரிமையோடு கேட்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
23 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago