“சமூக நீதியைக் கொடுக்க திமுக அரசுக்கு மனமில்லை” - சாதிவாரி கணக்கெடுப்பு கருத்தரங்கில் அன்புமணி ஆவேசம்

By செய்திப்பிரிவு

சென்னை: "சமூக நீதி, சமூக நீதியென தமிழகத்தில் வார்த்தைக்கு வார்த்தைப் பேசப்படுகிறது. தந்தை பெரியாரின், அண்ணாவின் வாரிசு நாங்கள் என்று இங்குள்ள அரசியல் கட்சிகள் பேசுகின்றன. ஆனால், அடிப்படையான சமூகநீதியைக் கொடுக்கின்ற மனம் இன்னும் வரவில்லை" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தி.நகரில், பாமக சார்பில் சமூகநீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்ற தலைப்பில் வியாழக்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியது: "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநில அரசு எடுக்க வேண்டும். இதைத்தான் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பல ஆண்டுகளாக கூறி வருகிறார். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் அவரது மனைவி ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை பலமுறை பார்த்துவிட்டார்.

இன்றைக்கு முதல்வராக இருக்கும் ஸ்டாலினிடம் பலமுறை பேசி, சந்தித்துள்ளோம்.மேலும், தொலைபேசி மூலமாகவும், கடிதம் மற்றும் அறிக்கைகள் மூலமாகவும் தொடர்பு கொண்டோம். இன்றைக்கு கருத்தரங்கமும் நடத்தப்படுகிறது. எதற்காக? இது, ஏதோ ஒரு சாதி முன்னேற்றத்துக்காக அல்ல, தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழகம் எப்படி முன்னேறும். பெரிய பெரிய தொழிற்சாலைகளும், ஐடி வளாகங்களும், கட்டிடங்களும் கட்டினால் முன்னேறி விடுமா? முன்னேறாது. இந்த சமூகத்தில் உண்மையாகவே பின்தங்கிய நிலையில் யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்களை கைக்கொடுத்து மேலே தூக்கி, வேலைவாய்ப்பு, கல்வி, வீடு, சுகாதாரம் அனைத்து வழங்கினால்தான் தமிழகம் முன்னேறும்.

ஒட்டுமொத்தமாக தமிழகம் எப்படி வளர்ச்சி அடையும் என்றால், பின்தங்கியவர்களுக்கு சமூக நீதி கிடைக்க வேண்டும். சமூக நீதி என்றால் என்ன? சமுதாயத்தில் பின்தங்கிய சமூகங்கள் முன்னுக்கு வர வேண்டும். முன்னேறிய சமூகங்களுக்கு நிகராக வர வேண்டும். அதுதான் சமூக நீதி. சமூக நீதி, சமூக நீதியென தமிழகத்தில் வார்த்தைக்கு வார்த்தைப் பேசப்படுகிறது. சமூக நீதியின் பிறப்பிடம் தமிழகம் என்று கூறப்படுகிறது. தந்தை பெரியாரின், அண்ணாவின் வாரிசு நாங்கள் என்று தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் பேசுகின்றன. ஆனால், அடிப்படையான சமூகநீதியைக் கொடுக்கின்ற மனம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை" என்று பேசினார்.

இந்த கருத்தரங்கில் பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், மூத்த வழக்கறிஞர் மாசிலாமணி, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அசோக் வரதன் ஷெட்டி மற்றும் கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE