பாஜக - அதிமுக கூட்டணி முறிவு என்பது நம்ப முடியாத நாடகம்: உதயநிதி கருத்து

By செய்திப்பிரிவு

கம்பம்: பாஜக உடனான கூட்டணி முறிவு என்று அதிமுக கூறுவது நம்ப முடியாத நாடகம் என்று அமைச்சர் உதயநிதி கூறினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேற்று தேனி மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதற்கட்டமாக லோயர் கேம்ப் மணிமண்டபத்தில் உள்ள கர்னல் ஜான்பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் கம்பத்தில் திமுகவின் 1,066 மூத்த தொண்டர்களுக்கு ரூ.10 ஆயிரம் பொற் கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர்கள் கம்பம் என்.ராம கிருஷ்ணன் (தெற்கு), தங்க தமிழ்ச்செல்வன் (வடக்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். அமைச்சர் ஐ.பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார்.

பொற்கிழி வழங்கி அமைச்சர் உதயநிதி பேசியதாவது: எனது முதல் அரசியல் பயணம் 2019 பிப்ரவரியில் ஆண்டிபட்டியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் தான் தொடங்கியது. அந்த வகையில் எனது பொது வாழ்வுக்கு அடித்தள மிட்டது தேனி மாவட்டம்தான். எந்த மாவட்டத்துக்குச் சென்றாலும் மூத்த தொண்டர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுப்பேன்.

மூத்த தொண்டர்கள் பெரியார், அண்ணா போன்ற தலைவர்களை பார்த்திருக்கிறார்கள், இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. கட்சியின் வரலாறே நீங்கள்தான். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் வீரபாண்டியில் நடந்த இளைஞரணி செயல்வீரர் கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது: திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு டிச.17-ம் தேதி சேலத்தில் நடைபெற உள்ளது. ஒரு மாநாடு எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இது அமையும். ஆனால் மதுரையில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாநாடு நடைபெற்றது. ஒரு மாநாடு எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு உதாரணமாக அது அமைந்து விட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி இருக்கும் வரை நீட் தேர்வு வரவில்லை.

பாஜக பின்னணியில் செயல்பட்ட அதிமுக ஆட்சிக்கு வந்த போது தான் நீட் தேர்வு வந்தது. இதுவரை 22 பேர் நீட்தேர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய இரண்டு முறை மசோதா நிறைவேற்றப் பட்டுள்ளது. தற்போது நீட் விலக்கை மக்கள் இயக்கமாக மாற்ற 50 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க இருக்கிறோம். அதை சேலம் மாநாட்டில் முதல்வரிடம் ஒப்படைப்போம். ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று கூறிய பாஜக, அதைச் செயல்படுத்தவில்லை.

ஆனால் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். குடும்ப ஆட்சி என்று எங்களைக் குறை கூறுகிறார்கள். தமிழகமே எங்கள் குடும்பம்தான். அந்த அடிப்படையில்தான் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. பாஜக உடனான கூட்டணி முறிவு என்று அதிமுக கூறுவது நம்ப முடியாத வெறும் நாடகம் இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து முத்துத்தேவன் பட்டியில் உள்ள வீட்டு வசதி வாரிய சமுதாயக் கூடத்தில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா முன்னிலை யில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்பு சுய உதவிக் குழு சிறுதானிய அங்காடியைத் திறந்து வைத்ததுடன் அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கேஎஸ்.சரவணக் குமார் (பெரியகுளம்), முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையா, முன்னாள் எம்பி கம்பம் செல்வேந்திரன், போடி ஒன்றியச் செயலாளர் எஸ்.லட்சுமணன் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE