சென்னை: வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நாளை தொடங்குகிறது. இதை முன்னிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலும் நாளை வெளியிடப்படுகிறது. இந்நிலையில், நேற்று தலைமைச்செயலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஆலோசனை நடத்தினார்.
நேற்று காலை 11.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் 1.15 மணி வரை நீடித்தது. கூட்டத்தில், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர்தல் தொடர்பான நடத்தை விதிமுறைகள், வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றும்படி கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு சத்யபிரத சாஹூ அறிவுறுத்தினார்.
கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: தேர்தல் பணிக்காக பணியாளர்கள் அதிகளவில் செல்கின்றனர். அவர்களுக்கு போதிய சுகாதார வசதி செய்து தரவேண்டும். இயற்கை உபாதையை கழிக்க அவர்கள் சென்றால், உடனடியாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, தேர்தல் ஆணையத்தின் செலவில் இ-டாய்லெட் அமைக்க வேண்டும்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் (அதிமுக): பெயர் சேர்த்தல், நீக்கல் படிவங்கள் விருப்பு வெறுப்பின்றி அனைத்து கட்சிகளுக்கும் வழங்க வேண்டும். 18 வயது நிரம்பியவர்களை முழுமையாக பட்டியலில் சேர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசிடம் இருந்து தகவல் பெற்று இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட வேண்டும். குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்படும்போது அங்கு குடியிருந்தவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டால் அவர்கள் வாக்களிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்.
வாக்காளர் பட்டியலை புகைப்படத்துடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 6.30 கோடி வாக்காளர்களில் 20 லட்சம் பேர் இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவுகள். இவை நீக்கப்பட்டுள்ளன. இன்னும் பல பகுதிகளில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளன. இவற்றை கண்டறிந்து நீக்க வேண்டும்.
கராத்தே தியாகராஜன் (பாஜக மாநில செயலாளர்): தேர்தல் சிறப்பு முகாம் நடைபெறும்போது, இயற்கை பேரிடராக இருந்தால், அதற்கு மாற்று நடவடிக்கை வேண்டும் என்றோம். ஒரே வாக்காளர் பெயர் 2 இடங்களில் இருந்தால் இரண்டையும் நீக்குகின்றனர். இதை தவிர்க்க கூறியுள்ளோம். இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னரும், தேர்தல் காலத்தில் அதிகளவிலான வாக்காளர்கள் நீக்கப்படுகின்றனர். நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
பார்த்தசாரதி (தேமுதிக துணை பொதுச்செயலாளர்): பெயர் சேர்க்கும் மனு அளிக்கும்போது, அதற்கான ஒப்புகை சீட்டை அளித்தால், அதை வைத்து வாக்களிக்க வாய்ப்பு தரவேண்டும் என்று கோரியுள்ளோம். வாக்காளர் சேர்ப்பு முகாமில் அரசு அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக செயல்படுவதால், தனியாரின் பங்களிப்பும் வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர்): வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பதற்றம் அதிகம் உள்ள இடங்களை கண்டறிந்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இறந்த வாக்காளர்கள் தொடர்ச்சியாக பட்டியலில் இருப்பதுடன் அவர்களே வாக்களிப்பதாக தொடர்ச்சியாக பட்டியலில் வருகிறது. அந்த முறை நல்லதல்ல. சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகள், இக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்பு தரவேண்டும் என்று கூறியுள்ளோம்.
சந்திரமோகன் (காங்கிரஸ் சட்டத்துறை தலைவர்): 6.30 கோடி வாக்காளர்களில் இறந்த வாக்காளர்கள் 20 லட்சம் பேரை நீக்கியுள்ளனர். அதே நேரம் வாக்குச்சாவடிகள் 68 ஆயிரமே உள்ளது. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பெண்கள் அதிகளவில் வாக்களிக்க வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். இரட்டை பதிவு வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர்.
ஸ்டெல்லா மேரி (ஆம்ஆத்மி மாநில குழு உறுப்பினர்): கள்ள ஓட்டு போடுவதை தடுக்க வேண்டும். இதற்காக வாக்காளர்களின் கைரேகையை வைத்து வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago