பல்கலைக்கழங்களை தவறாக வழிநடத்தும் சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன் 


மதுரை: பல்கலைக்கழகங்களை தவறாக வழிநடத்தும் சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பணியாளர்களாக பணிபுரியும் ஆர்.செல்வம், ஜி.சுவாமிநாதன் ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பணியாளர்களாக உள்ளோம். எங்களுக்கு சிண்டிகேட் ஒப்புதல் அடிப்படையில் 7 மற்றும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு வழங்கப்படுவது போல் தேர்வு நிலை, சிறப்பு நிலை அந்தஸ்து மற்றும் ஊதிய உயர்வு, பணப்பலன்கள் வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

அந்த வழக்கில் தேர்வு நிலை, சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கப்பட்டு, அதற்குரிய பணப்பலன்களை பெற்றவரின் ஊதியத்தில் கூடுதலாக வழங்கிய பணத்தை பிடித்தம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் தேர்வு நிலை, சிறப்பு நிலை பதவி உயர்வுக்கான ஊதிய உயர்வு பெறாத எங்களின் ஊதியத்திலும் பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் முந்தைய உத்தரவை மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்து பிறப்பித்த உத்தரவு: பல்கலைக்கழகங்களில் 7 மற்றும் 14 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை பதவி உயர்வு வழங்கும் தவறை அனைத்து பல்கலைக்கழங்களும் செய்கின்றன. இதன் மூலம் பல்கலைக்கழக நிர்வாகம் தவறாக வழிநடத்தப்படுகின்றன. தவறான நிர்வாகத்துக்கு எந்த பல்கலைக்கழகங்களும் விதிவிலக்கு இல்லை.

சிண்டிகேட் உறுப்பினர்களை அரசு நியமனம் செய்கிறது. சிண்டிகேட் உறுப்பினர்கள் என்ற உயர்ந்த பதவியில் இருந்து சமூகத்தில் நற்பெயர் பெறுகின்றனர். அந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் பல்கலைக்கழங்களை தவறாக வழிநடத்தும் தீர்மானங்களை நிறைவேற்றவதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு நடைபெறும் போது நீதிமன்றம் கண்களை மூடிக் கொண்டிருக்க முடியாது.

இதனால் பல்கலைக்கழங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து விசாரிக்க தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளர் தனி குழு அமைக்க வேண்டும். இந்த குழு விசாரணையில் முறைகேடு கண்டறியப்பட்டால் சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் பல்வேறு தவறுகளை செய்துள்ளது. ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக அரசு மற்றும் நிதிக்குழுவிடம் அனுமதி பெறாமல் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கோரிக்கை குழுவின் பரிந்துரையை ஏற்று சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக பணப்பலன்களை வழங்க சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பணப்பலன் வழங்கிய பிறகே இப்பிரச்சினை பல்கலைக்கழக நிதிக்குழுவுக்கு அனுப்பப்படுகிறது. பின்னர் நிதிக்குழு பல்வேறு ஆட்சேபனைகளை தெரிவிக்கிறது. இந்த தவறால் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகின்றன. இந்த தவறுகளுக்கு காரணமான சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க சிண்டிகேட் உறுப்பினர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாம். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்