மேல்முறையீடு நிலுவையில் இருந்தாலும் ஆயுள் கைதியின் பரோல் கோரிக்கையை பரிசீலிக்கலாம்: உயர் நீதிமன்றம்

By கி.மகாராஜன் 


மதுரை: ஆயுள் தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு மனு நிலுவையில் இருந்தாலும் ஆயுள் கைதியின் பரோல் கோரிக்கையை பரிசீலிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த லதா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் திருப்பதிராஜன் குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார். அவருக்கு 40 நாள் பரோல் கேட்டு விண்ணப்பித்தோம். பரோல் விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்து உத்தரவிட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் 40 நாள் பரோல் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் வாதிடுகையில், மேல்முறையீடு மனுவில் இடைக்கால ஜாமீன் கோரிய மனு தள்ளுபடியானால் பரோல் கேட்க முடியாது. அதோடு தண்டனையை எதிர்க்கும் மேல்முறையீடு மனு நிலுவையில் இருப்பதால் பரோல் வழங்க முடியாது என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தண்டனை சிறைவாசிக்கு அவசர மற்றும் சாதாரண பரோல் வழங்க முடியும். அது அரசின் விருப்பத்தை பொறுத்தது. இதை சட்டப்படியான உரிமையாக கேட்க முடியாது. பரோல் வழங்குவதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. சிறைவாசியின் பெற்றோர், கணவன், மனைவி, மகன், மகள் உள்ளிட்டோரின் உடல்நல பாதிப்பு. திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பரோல் கேட்க முடியும்.

கர்ப்பமான பெண் சிறைவாசி சிறைக்கு வெளியில் குழந்தை பெற முடியும். இதில் 40-வது விதி எதிர்மறையாக இருந்தாலும், விதிவிலக்கு அளிக்கலாம். விதிவிலக்கு அதிகாரங்கள் பரோல் மறுப்பதற்காகவே பயன்படுகிறது. பரோல் கேட்கும் மனுக்களின் மீது சிறைத் துறை டிஐஜி தான் முடிவெடுக்க முடியும்.

எனவே, பரோல் கேட்கும் மனுதாரரின் மனுவை சிறைத்துறை டிஐஜி மீண்டும் 4 வாரத்தில் பரிசீலித்து உத்தரவிட வேண்டும். இந்த பரிசீலனைக்கு மேல்முறையீடு மனு நிலுவையில் இருப்பதை கருத்தில் கொள்ளத்தேவையில்லை. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE