ஆளுநர்‌ மாளிகைக்கே பாதுகாப்பு இல்லாத அளவுக்கு சட்டம்‌ - ஒழுங்கு மோசம்: ஓபிஎஸ் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: “ஆளுநர்‌ மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம்‌ - ஒழுங்கு மோசமான நிலையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ளது. இது கடும்‌ கண்டனத்துக்கு உரியது” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜெயலலிதா ஆட்சிக்‌ காலத்தில்‌ தமிழ்நாடு காவல்‌துறை இங்கிலாந்தில்‌ உள்ள ஸ்காட்லாண்டு யார்டுக்கு இணையாக பேசப்பட்டு, போற்றப்பட்டது. தமிழக காவல்‌ துறை பெருமைக்குரிய காவல்‌ துறையாக விளங்கியது. ஆனால்‌, இன்றைக்கு தமிழ்நாடு காவல்‌ துறை தனது பாரம்பரிய பெருமையை இழந்து தவிக்கிறது. தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்றதிலிருந்தே சட்டம்‌ ஒழுங்கை சீர்குலைக்கும்‌ ரவுடிகள்‌, ஆயுதம்‌ தயாரிப்போர்‌, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவோர்‌, கொலைகாரர்கள்‌, கொள்ளையடிப்போர்‌, மணல்‌ கடத்துவோர்‌, கள்ளச்சாராயம்‌ காய்ச்சுவோர்‌, பாலியல்‌ பலாத்காரம்‌ செய்வோர்களின்‌ ஆதிக்கம்‌ கொடிக்கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. பத்திரிகைகளை திறந்தாலே பாலியல்‌ வன்கொடுமை செய்திகள்‌ தான்‌ பார்வைக்கு வருகின்றன.

வேங்கடமங்கலம்‌ கவுன்சிலர்‌ ரவுடிகளால்‌ வெட்டிக்‌ கொலை, திருச்சி மண்டல துணை தாசில்தார்‌ மீது தி.மு.க.வினர்‌ கொலைவெறித்‌ தாக்குதல்‌, தூத்துக்குடியில்‌ சுமை தூக்கும்‌ தொழிலாளி வெட்டிக்‌ கொலை, இரண்டு சிறுமிகளுக்கு காவல்‌ துறை சார்‌ ஆய்வாளரே பாலியல்‌ தொல்லை கொடுத்தது, சோழவரத்தைச்‌ சேர்ந்த ரவுடி அடித்துக்‌ கொலை, ராணிப்பேட்டை மாவட்டம்‌ காவரேப்பாக்கத்தில்‌ பார்த்திபன்‌ என்பவர்மீது கொடூரத்‌ தாக்குதல்‌, சென்னை, திருவல்லிக்கேணியில்‌ தொழிலாளி அடித்துக்‌ கொலை, பள்ளிக்கரணை மதனகோபால்‌ வீட்டில்‌ வெடிகுண்டு வீச்சு, என கடந்த இரண்டு நாட்களில்‌ மட்டும்‌ ஏகப்பட்ட வன்முறைச்‌ சம்பவங்கள்‌ தமிழ்நாட்டில்‌ நடந்தேறியுள்ளன.

இவற்றுக்கெல்லாம்‌ முத்தாய்ப்பாக, இன்று ஆளுநர்‌ மாளிகை முன்பு இரண்டு பெட்ரோல்‌ குண்டுகள்‌ வீசப்பட்டிருக்கின்றன. இது குறித்து வினோத்‌ என்பவரை காவல்‌ துறை கைது செய்து விசாரித்ததில்‌, இவர்‌ தேனாம்பேட்டை எஸ்‌.எம்‌. நகர்‌ பகுதியைச்‌ சேர்ந்தவர்‌ என்பதும்‌, ஏற்கெனவே காவல்‌ துறையில்‌ உள்ள ரவுடிகள்‌ பட்டியலில்‌ இடம்‌ பெற்றிருக்கிறார்‌ என்பதும்‌, 2017 ஆம்‌ ஆண்டு தேனாம்பேட்டை காவல்‌ நிலையத்தில்‌ பெட்ரோல்‌ குண்டு வீசி தாக்குதல்‌ நடத்தியவர்‌ என்பதும்‌, டாஸ்மாக்‌ கடையில்‌ பெட்ரோல்‌ குண்டு வீசி தாக்குதல்‌ நடத்தியிருக்கிறார்‌ என்பதும்‌, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம்‌ பாரதிய ஜனதா கட்சியின்‌ தலைமை அலுவலகத்தில்‌ பெட்ரோல்‌ குண்டு வீசியவர்‌ என்பதும்‌, இதன்‌ காரணமாக குண்டர்‌ தடுப்புச்‌ சட்டத்தில்‌ கைது செய்யப்பட்டவர்‌ என்பதும்‌, அண்மையில்தான்‌ வெளியே வந்திருக்கிறார்‌ என்பதும்‌, வெளியே வந்தவுடன்‌ மீண்டும்‌ இதுபோன்ற தாக்குதலில்‌ ஈடுபட்டிருக்கிறார்‌ என்பதும்‌, நீட்‌ தேர்வுக்கு எதிராக இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்‌ என்பதும்‌ தற்போது தெரிய வந்துள்ளது.

ஆளுநர்‌ மாளிகை மீது தாக்குதல்‌ நடத்தியுள்ள வினோத்‌ என்பவர்‌ ஏற்கெனவே குண்டர்‌ தடுப்புச்‌ சட்டத்தில்‌ கைது செய்யப்பட்டு வெளியே வந்திருக்கும்‌ நிலையில்‌, அவருடைய நடவடிக்கையை கண்காணிக்கும்‌ பொறுப்பும்‌, கடமையும்‌ அரசுக்கு உண்டு. தி.மு.க. அரசின்‌ பொறுப்பற்ற தன்மை காரணமாக இன்று ஆளுநர்‌ மாளிகையின்மீது தாக்குதல்‌ நடத்தப்பட்டுள்ளது. “ஆளுநர்‌ மாளிகையே ... அடக்கிடு வாயை ...” என்று தி.மு.க. பொருளாளர்‌ டி.ஆர்‌. பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்‌, நீட்‌ தேர்வுக்கு எதிராக தி.மு.க. கையெழுத்து பெறும்‌ நாடகத்தை நடத்திக்‌ கொண்டிருக்கின்ற நிலையில்‌, ஆளுநர்‌ மாளிகைமீது தாக்குதல்‌ நடத்தப்பட்டிருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள்‌ கருதுகின்றனர்‌. ஆளுநர்‌ மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம்‌ - ஒழுங்கு மோசமான நிலையில்‌ தமிழ்நாட்டில்‌ உள்ளது. இது கடும்‌ கண்டனத்துக்குரியது.

ஆளுநர்‌ மாளிகை மீதே பெட்ரோல்‌ குண்டு வீசும்‌ அளவுக்கு துணிச்சல்‌ ரவுடிகளுக்கு வந்திருக்கிறது என்றால்‌, இதற்குக்‌ காரணம்‌ வன்முறையாளர்கள் மீது தி.மு.க. அரசு மென்மையானப்‌ போக்கைக்‌ கடைபிடிப்பதுதான்‌ என்று சொன்னால்‌ அது மிகையாகாது. இனி வருங்காலங்களிலாவது முதலமைச்சர்‌‌ சட்டம்‌ ஒழுங்கு பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம்‌ அளித்து, ஆளுநர்‌ உட்பட அனைவரின்‌ பாதுகாப்பினையும்‌ உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்