சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்த பணி வரும் 27-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பயோமெட்ரிக் முறையில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ம் தேதி வெளியிடப்பட்டு, அன்றைய தினமே வாக்காளர் பட்டியல் திருத்த பணி தொடங்குகிறது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி ஆகிய தேசிய கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மாநில கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் தாயகம் கவி ஆகியோர் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் இன்பதுரை கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் திமுக தரப்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகையில், “வாக்குச்சாவடிகளில் அதிகமான பெண் பணியாளர்கள் தேர்தல் சமயத்தில் பணியாற்றுகின்றனர். ஆனால், அந்த வாக்குச்சாவடி மையங்களில் போதுமான கழிவறை வசதிகள் இருப்பது இல்லை. எனவே, கூடுதலான கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். கழிவறைகளைப் பயன்படுத்துவதற்காக வாக்குச்சாவடி பணியாளர்கள் வெளியே செல்லும் நேரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இ-டாய்லெட் வசதிகளை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி தர வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.
அதிமுக சார்பில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "சென்னை, கோவை, சேலம், நெல்லை உட்பட எங்கெல்லாம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய வீடுகள் கட்டப்படுகிறதோ, அங்கு குடியிருந்தவர்களை எல்லாம் கண்டுபிடித்து அவர்கள் வாக்களிக்கும் உரிமையை ஏற்படுத்தி தர வேண்டும். அதேபோல், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான படிவங்களை பாரபட்சம் இல்லாமல் அனைத்துக் கட்சியினருக்கும் வழங்க வேண்டும்” என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து பேசினார்.
பாஜக சார்பில் கூட்டத்தில் பங்கேற்று பேசிய, கராத்தே தியாகராஜன், “பாஜக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்துக்கு அளித்துள்ளோம். அந்த பட்டியல் இன்னும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்ற செய்யப்படாமல் இருக்கிறது. எனவே, அதனை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு தமிழக பாஜக முழு ஆதரவளிக்கும்” என்று பேசினார்.
மேலும், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் ஸ்டெல்லா மற்றும் பாஃரூக் ஆகியோர் கலந்துகொண்டனர். அக்கட்சியின் சார்பில், ‘கைரேகையை வைத்து வாக்களிக்கும் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான், கள்ள வாக்கு செலுத்துவது குறையும். இந்தியாவில் அனைவரிடமும் ஆதார் அட்டை உள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு பயோ மெட்ரிக் முறை மூலம் வாக்கு செலுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி, 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர். இவர்களைத் தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தங்களது தரப்பு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago