உதயேந்திரம் பேரூராட்சியில் ‘அடடா’... தார்ச்சாலை நடுவே மின் கம்பம்! - ‘அபார’ பணியால் மக்கள் ஆச்சரியம்

By செய்திப்பிரிவு

ஆலங்காயம்: வாணியம்பாடி அருகே சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் 14-வது வார்டு மும்தாஜ் கார்டன் பகுதியில் சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். மேலும், சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என உதயேந்திரம் பேரூராட்சி மன்றத் தலைவர் பூசாராணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையடுத்து, உதயேந்திரம் பேரூராட்சி 14-வது வார்டு பகுதியில் ரூ.48 லட்சம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் ஒப்பந்ததாரராக நியமிக்கப்பட்டு தார்ச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், 14-வது வார்டில் சாலையின் நடுவே இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் அப்படியே தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘சாலையின் நடுவே பல ஆண்டுகளாக இருந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என மின்வாரிய அலுவலகம், பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் பயன் இல்லை.

இந்நிலையில், தான் 14-வது வார்டில் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. எனவே, சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய தார்ச்சாலை அமைப்பார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், சாலை அமைத்த தொழிலாளர்கள் இரவோடு, இரவாக மின்கம்பத்தை அகற்றாமல் அப்படியே சாலையை அமைத்துள்ளனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் மின் விளக்கு வெளிச்சம் இல்லாததால் விபத்து ஏற்படும் நிலை உருவாகிவிட்டது. பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் தார்ச்சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி மன்ற நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘மின் கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் தான் அகற்றியிருக்க வேண்டும். அவர்களிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். இருந்தாலும், சாலையின் நடுவே மின்கம்பத்தை அப்படியே விட்டு தார்ச்சாலை அமைத்தது தவறு தான், அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE