தமிழகம் முழுவதும் 10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்த அரசு திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இம்மாதம் 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 31 வரை, 10 வாரங்கள் தலா 1,000 இடங்களில் நடத்தப்படவிருக்கிறது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வரால் வருகின்ற நவம்பர் 4-ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் தொடங்கப்படவுள்ள ‘’Health Walk’’ திட்டத்தின் கீழ் சென்னையில் இன்று (அக்.25) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 8 கிலோ மீட்டர் தூரம் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையை தேர்வு செய்து உறுதிபடுத்துவதற்கான ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "வருகின்ற நவம்பர் 4-ம் தேதி தமிழக முதல்வரால் முத்துலட்சுமி பார்க் என்கின்ற இந்த இடத்தில் தொடங்கி பெசன்ட் அவென்யூ சாலை, கடற்கரை சாலை சென்று மீண்டும் சர்ச் ரோடு, அன்னை வேளாங்கண்ணி ஆலயம் வழி, 2nd Avenue, 3rd Avenue ஆல்கார்ட் எதிரில் யூடர்ன் செய்து திரும்பவும் இதே இடத்திற்கு வருவது. இப்படி வந்தால் 8 கி.மீ தூரத்துக்கு இது அடங்கும்.

ஒவ்வொரு நாளும் 8 கி.மீ தூரம் நடந்தால் 10,000 அடி தூரம் எடுத்து வைக்கும் நிகழ்வு நடக்கும். எனவே 10,000 அடி தூரம் நடப்பது ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும். இந்த நடைபாதை ஆய்வில் காவல்துறை துணை ஆணையர் (அடையார்) கலந்து கொண்டுள்ளார். ஒவ்வொரு நாளும் இந்த சாலையைப் பொறுத்தவரை காலை 5 மணி தொடங்கி 8 மணி வரை கனரக வாகனம் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்படுகிறது என்று அவர் அறிவித்திருக்கிறார்.

மக்கள் மிக எளிதாக நடப்பதற்கும், அச்சமில்லாமல் நடப்பதற்கும் இந்த சாலை பயன்பட உள்ளது. குறிப்பாக வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையவுள்ளது. இந்த 8 கி.மீ தூரத்துக்கான இடத்தில் 24 அடி தூரத்துக்கான வரவேற்பு வளைவு அமையவிருக்கிறது. Start Point தொடங்கி Finish point வரை இந்த வளைவு இருக்கும். இந்த வளைவு பசுமையான சாலை என்பதால் பசுமையாக இருக்க வேண்டும் என்பதால் பசுமை பகுதிகள் இணைக்கப்பட இருக்கிறது.

வடகிழக்கு பருவமழை கடந்த 20.10.2023 முதல் தொடங்கி உள்ளது. அனைத்து இடங்களிலும் மழை பரவலாக பெய்து வருகின்றது. இந்த வடகிழக்கு பருவமழை காலங்களில் தான் மழைக்கால நோய் பாதிப்புகள் தொடங்குகின்றன. குறிப்பாக மலேரியா, டெங்கு, காலரா, சேற்றுப்புண், தொண்டை வலி, சளி போன்ற பிரச்சினைகள் மழைக்காலங்களில்தான் அதிகமாக வரும். எனவே இந்த மழைக்காலங்களில் வரும் நோய்கள் தவிர்க்க முடியாத ஒன்று.

ஏனென்றால் கொசு உற்பத்தி அதிகமாகவது மழைக்காலங்களில்தான். இத்தகைய நன்னீரில் உருவாகும் ஏடிஸ் என்கின்ற கொசுக்கள் மூலமாக டெங்கு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை டெங்கு பெரிய அளவில் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. நேற்றுவரை 5600 டெங்கு பாதிப்புகள் கடந்த பத்து மாதங்களில் ஏற்பட்டிருக்கிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக பாதிக்கப்படும் மாதங்கள் ஆகும்.

எனவே இந்த இரண்டு மாதங்களில் வருகின்ற பாதிப்புகள் இன்னும் 2000 வரை வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நேற்றுவரை மருத்துவமனையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 490 பேர். இதுவரை 10 மாதங்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 5 பேர். எனவே இந்த மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, வருகின்ற அக்.29 தொடங்கி நவ.5, நவ.11, நவ.19, நவ.26, டிச.3, டிச.10, டிச.17, டிச.24, டிச.31 அதாவது அக்டோபர் மாதம் முதல் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சில குறிப்பிட்ட 10 வாரங்களில் உள்ள ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் 1000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது.

இதனால், டிசம்பர் மாதம் இறுதிக்குள் பத்து வாரங்களில் 10,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவிருக்கிறது. மழைக்கால மருத்துவ சிறப்பு முகாம்கள் 10,000 இடங்களில் 10 வாரங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படுவது என்பது மருத்துவத்துறை வரலாற்றில் இதுவே முதன்முறை. எனவே பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புகள், சளி, தொண்டை வலி போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் ஏதாவது பாதிப்புகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE