கிருஷ்ணகிரியில் நவராத்திரி நிறைவு விழா - 15 தேர்கள் ஒன்று கூடும் நிகழ்வு

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவராத்திரி திருவிழா கடந்த 15 ஆம் தேதி விமரிசையாக துவங்கியது. நவராத்திரியை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக பல்வேறு கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

10 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி நிகழ்ச்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நவராத்திரி நிறைவு நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று இரவு பழைய பேட்டை பகுதியிலுள்ள லட்சுமி நாராயண சுவாமி கோயில், சீனிவாச பெருமாள் கோயில், தஞ்சாவூர் மாரியம்மன் கோயில், கவீஸ்வரர்கோயில், ராமர் கோயில், காட்டிநாயக்கனப்பள்ளி முருகர் கோயில், புதுப்பேட்டை கிருஷ்ணன் கோயில், சோமேஸ்வரர் கோயில் என 15 கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகளின் சிறப்பு அலங்கார தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது.

இரவு முழுவதும் பல்வேறு வீதிகள் வழியாகச் சென்ற இந்த 15 தேர்களும் இன்று காலை பழைய பேட்டை காந்தி சிலை அருகே ஒன்று கூடின. பின்னர் தேர்களுக்கு முன்பு வன்னி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வன்னி மரத்தின் இலைகளை சேகரித்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE