டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபு நியமனம்: அரசு பரிந்துரையை ஆளுநர் மீண்டும் நிராகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமிக்கும் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை. எனவே, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்க வேண்டும்’ என்று தெரிவித்து, இதுதொடர்பான கோப்பை தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக டிஜிபியாக இருந்து கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெற்ற சைலேந்திர பாபுவை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தலைவராக நியமிக்க தமிழக அரசு முடிவெடுத்தது. அத்துடன் அதன் உறுப்பினர்களாகவும் 8 பேரை புதிதாக நியமித்து, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.

இதுதொடர்பான கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த கோப்புகளை தமிழக அரசுக்கே ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார்.

இந்த பதவிகளுக்கான விண்ணப்பம் குறித்து வெளியிடப்பட்ட விளம்பரம், பெறப்பட்ட விண்ணப்பங்கள், தலைவர் - உறுப்பினர் பதவிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர்களின் விவரங்கள், அவர்கள் இறுதி செய்யப்பட்டது எப்படி? நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விவரங்களை அதில் ஆளுநர் கோரியிருந்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதாகவும், நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களுடன் தமிழக அரசு சார்பில் ஆகஸ்ட் மாத இறுதியில் மீண்டும் ஆளுநருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டன.

‘வெளிப்படைத்தன்மை இல்லை’: இந்நிலையில், ‘டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை’ என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை தெரிவித்து, வேறொருவரை தலைவராக பரிந்துரைக்குமாறு சமீபத்தில் தமிழக அரசுக்கு அந்த கோப்பை ஆளுநர் மீண்டும் திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: டிஎன்பிஎஸ்சி தலைவராக, நேர்மையானவரான முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழக அரசு பரிந்துரைத்தது. இந்த நிலையில், அவருக்கு தகுதியில்லை என, அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தது சர்வாதிகார முடிவு. மத்திய பாஜக அரசின் ஏஜென்ட்டாக செயல்படும் ஆளுநருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ஆளுநரின் கேள்விகளுக்கு அரசு உரிய முறையில் பதில் அளித்தும், வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசின் பரிந்துரையை அவர் நிராகரித்துள்ளார். பாரம்பரியமிக்க தலைவர்களையும், சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் சிறுமைப்படுத்தி பேசுவதுடன் அவதூறுகளையும் பொழிந்து வருகிறார் ஆளுநர். தமிழகத்துக்கும், தமிழக மக்களின் நலன்களுக்கும் விரோதமாக செயல்படும் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பியும், மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE