ஆம்னி பஸ் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்: கூடுதலாக அரசு பேருந்துகளும் இயக்கப்படும் என அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்திருந்த வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனர். இதனிடையே தேவை ஏற்பட்டால் கூடுதல் எண்ணிக்கையில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை ஒட்டி கடந்த அக்.20, 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் இயக்கப்பட்ட 8,003 பேருந்துகள் மூலம் 4.80 லட்சம் பேர் சென்னையில் இருந்து பயணமாயினர். இதேபோல் ஆம்னி பேருந்துகளில் மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் பயணித்திருந்தனர்.

இந்த காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 2,092 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. குறிப்பாக அவற்றுக்கு ரூ.27.59 லட்சம் வரி விதிக்கப்பட்ட நிலையில், ரூ.15.44 லட்சம் வசூலிக்கப்பட்டது. மேலும் பல்வேறு விதிமீறல்களுக்காக ரூ.36.95 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், ரூ.19.83 லட்சம் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக 119 ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன. இதனால் அதிருப்தி அடைந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், தவறிழைக்காத ஆம்னி பேருந்துகளை விடுவிக்கக் கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அதில், “மண்டல அலுவலகங்களில் குறைந்தபட்சம் 10 ஆம்னி பேருந்துகளை சிறைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையே பறிமுதல் நடவடிக்கைக்கு காரணம்” என சுட்டிக்காட்டியிருந்தனர். எனினும், நடவடிக்கை இல்லாத நிலையில், நேற்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அறிவித்தனர்.

தொடர் விடுமுறை நேற்றுடன் முடியும் நிலையில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த அறிவிப்பு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு திரும்பக் கூடிய மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையே, சென்னை கே.கே.நகரில் உள்ள போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில், இணை ஆணையர் ஏ.ஏ.முத்து தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், தென்மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் அ.அன்பழகன், டி.கே.திருஞானம், டி.தாஜுதீன், பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் கூறியதாவது:

பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வழியில் சோதனை நடத்தக் கூடாது, தவறிழைக்காத வாகனங்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும். வரி செலுத்திய வாகனங்களை விடுவிப்பதாக அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர். பிற மாநிலத்தில் பதிவு செய்த வாகனங்களை தமிழகத்தில் இயக்குவதால் இரு மடங்கு வரி செலுத்துகிறோம். இவற்றில் தமிழக பதிவெண்ணாக மாற்ற வேண்டிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சங்கம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அச்சம் வேண்டாம்: இதற்கிடையே, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது முகநூல் பக்கத்தில் “ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாவிட்டாலும் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். எனவே, பயணிகள் அச்சப்பட தேவையில்லை” என தெரிவித்தார்.

அதன்படி, சென்னைக்கு தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 1,213 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 3,313 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டது. இதேபோல், பிற பகுதிகளில் இருந்து முக்கிய தொழில் நகரங்களுக்கு செல்லும் வகையில் 1,846 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில் தேவைக்கேற்ப இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட முக்கிய பகுதிகளை பொதுமக்கள் வந்தடைந்தனர். ஆம்னி பேருந்துகள் வாயிலாகவும் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர் திரும்பினர்.

இதேபோல் சொந்த வாகனங்களில் சென்றவர்கள் நேற்று மாலை முதலே ஊர்களுக்குத் திரும்பினர். இவ்வாறு ஊர் திரும்பும்போது எல்லைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்