பொது நோக்கத்துக்காக கையகப்படுத்தும் நிலங்களில் தாமதமின்றி பணிகளைத் தொடங்க வேண்டும்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

மதுரை: பொது நோக்கத்துக்காகக் கையகப் படுத்தும் நிலங்களில் தாமதம் இல்லாமல் திட்டப்பணிகளைத் தொடங்க வேண்டும்’ என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை உட்பட பல்வேறுமாவட்டங்களில் அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்திய நிலங்களில்திட்டங்கள் செயல்படுத்தப்பட வில்லை எனக் கூறி, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்பக் கேட்டு உயர் நீதிமன்ற கிளையில் சிலர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்து பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசு பதிலளிக்க வேண்டும்: மக்களின் எதிர்காலத் தேவை, வசதிக்காக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறை முடியும் வரை திட்டங்களை செயல்படுத்த முடியாது. ஆனால், கையகப்படுத்திய நிலங்களை 4 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருப்பது, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அந்த நிலங்களை அப்படியே வைத்திருந்தால் அரசு உரிய பதிலளிக்க வேண்டும்.

மக்களின் அடிப்படைத் தேவைகள்: மேலும், நிலம் கையகப்படுத்திவிட்டு அதில் திட்டங்களை செயல்படுத்தாமல் இருந்தால் நில உரிமையாளர்கள் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இந்த வழக்கில் மனுதாரர்களின் நிலம் அரசு திட்டங்களுக்குத் தேவை என அறிவிக்கப்பட்டு, தற்போது வரை நிலத்தை கையகப்படுத்தவில்லை. மனுதாரர்களுக்குஇழப்பீடும் வழங்கப்படவில்லை. அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் அதிகாரிகளின் பணிகள் பயனில்லாமல் போய்விட்டது. வரிப்பணத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய திட்டங் களுக்கு முன்னுரிமை அளிக்காமல் வாக்காளர்களுக்கு இலவசங் களை வாரி வழங்குகின்றனர். இது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும், அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றுவது அவசியம்.

நிலம் விடுவிப்பு: இந்த வழக்கில் மனுதாரர்களின் நிலம் வளர்ச்சி திட்டங்களில் இருந்து விடுவிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளாக நிலத்தை உரிமையாளர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனுதாரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE