சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் திமுக தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

By அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: மாநில சுயாட்சி பேசும் திமுக அரசு, உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய அரசை கைகாட்டி தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறது, என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சிவகாசியில் ரோட்டரி சங்கம் மற்றும் மதி மையம் இணைந்து ஆரம்பித்த ரத்த வங்கியை பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘இந்தியாவில் ஆண்டுக்கு 1.40 கோடி யூனிட் ரத்தம் தானமாக வழங்கப்படுகிறது. ஆனால் அது போதுமானதாக இல்லை. கூடுதலாக 10 லட்சம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் ரத்த வங்கிகளை அதிகமாக ஏற்படுத்தி, ரத்த தானம் வழங்குவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் காவிரி - குண்டாறு மற்றும் தாமிரபரணி குண்டாறு இணைப்பு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். பட்டாசு ஆலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம். தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தினால், ஒப்பந்த ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்வது குறையும். நேர்மையான அதிகாரிகளை நியமித்து பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய வேண்டும். பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை அரசின் தூண்டுதலில் கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மீனவர்கள் விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.கன்னியாகுமரியில் இருந்த ஆளும் கட்சியினர் உதவியுடன் கனிம வளங்கள் அள்ளப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதை அரசு தடுக்கவில்லை என்றால் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. அதனால் வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் கூடுதலாக நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் மட்டும் தான் 68 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. இதை பாதுகாக்க தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கடந்த 2012-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13 கோடி மக்கள் தொகை கொண்ட பிஹாரில் 45 நாட்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மாநில அரசு முடிவை வெளியிட்டுள்ளது. கர்நாடகா, ஓடிசாவில் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் மாநில அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.ஆனால் சமூக நீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது. மாநில சுயாட்சி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் அதிகாரத்தை தட்டிக் கழிக்கறிது. சாதிவாரி கணக்கெடுப்பு என்பது வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல. சமூக நிலை, பொருளாதாரம், கல்வி, வேளாண்மை உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட குறியீடுகளை கணக்கெடுக்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என உறுதி அளித்த திமுக. ஆட்சி வந்து இரு ஆண்டுகளுக்கு பின் நீட் தேர்வு ரத்து செய்வதற்கு கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே எங்களது கொள்கை. மருத்துவ கல்வி வணிகமயமாகி விட்டது.மக்களவை தேர்தல் கூட்டணி முடிவு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். ஆளுநரும், ஆளும் கட்சியும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும். அரசின் தவறை சுட்டி காட்டலாம். ஆனால் எதிர்க்க கூடாது. இரு தரப்பும் சேர்ந்து செயல்பட்டால் தான் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்படும்.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளுக்கு டெண்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசே கிரானைட் குவாரிகளை நடத்த முன்வர வேண்டும், என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, பாமக மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்