ஆயுதபூஜை பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது: சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டு சென்ற பொதுமக்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்டியது. சென்னை, புறநகர் பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில்களிலும், அரசு மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளிலும், சொந்த வாகனங்களிலும் சொந்த ஊர்களுக்கு உற்சாகமாக புறப்பட்டுச் சென்றனர்.

கடந்த வாரம் சனி, ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி ஆகிய பண்டிகைகளுக்கான விடுமுறை என 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சிக்குள்ளாயினர். குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்கள் உள்ளிட்ட பிற மாவட்டங்களை பூர்வீகமாக கொண்டவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். அதற்காக ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர்.

அதிக கட்டணப் புகார்: சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்லும் மக்களுக்காக அரசு போக்குவரத்து கழகம் உரிய ஏற்பாடுகள் செய்திருந்தாலும், நீண்ட தூர பயணம் என்பதால், பலர் தனியார் சொகுசு ஆம்னி பேருந்துகள், ரயில்களில் செல்லவே மக்கள் விரும்புகின்றனர். தென் மாவட்டங்களுக்கு செல்ல ரயில்களில் இடம் கிடைப்பது அவ்வளவு எளிது இல்லை என்பதால் ஏராளமானோர் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் சில, அதிக அளவில் கட்டணங்களை உயர்த்தி வசூலிப்பதாக ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் புகார்கள் எழுந்து வருகின்றன. அதே புகார் இந்த ஆயுதபூஜை பண்டிகையிலும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் 5,664 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். ரயில்களில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் என மொத்தம் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

முன்னதாக சொந்த ஊர் செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் கடந்த சில நாட்களாக மாநகரின் பிரபல இனிப்பகங்களுக்கு சென்று வகை வகையான இனிப்புகளை வாங்கியதால், இனிப்பகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இனிப்பகங்களும் பொதுமக்களை கவர பல புதிய இனிப்புகளையும், தொகுப்பு இனிப்பு பெட்டிகளையும் அறிமுகம் செய்திருந்தன. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில், சந்தை நிர்வாகம் சார்பில் சிறப்பு சந்தை திறக்கப்பட்டுள்ளது. அங்கு பூஜைக்கு தேவையான பொரி, கடலை, பூக்கள், பழ வகைகள், தேங்காய், வாழை இலை, வாழை கன்றுகள், கரும்பு, பூசணிக்காய், மாவிலை தோரணங்கள் உள்ளிட்டவை மலிவு விலையில் விற்கப்பட்டன.

பொதுமக்கள், தொழில் நிறுவனத்தினர், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் இங்கு பொருட்களை வாங்க குவிந்தனர். இதேபோன்று மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருநெல்வேலி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிராதன சந்தை பகுதிகளிலும் பூஜை பொருட்களை வாங்க நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியும், சாதகமில்லாத வானிலை காரணமாக மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைப்பொழிவு குறிப்பிடும்படியாக இல்லாத நிலையில், பொதுமக்கள் அதிக அளவில் சந்தைகளுக்கு பொருட்களை வாங்க சென்றனர். தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் பொரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வியாபாரிகளும் பெருமகிழ்ச்சிக்குள்ளாயினர்.

இதனால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், பொது போக்குவரத்து துறைகள், வணிக துறையினர் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் ஆயுதபூஜை கொண்டாட்டம் களைகட்டியது.

ஊர் திரும்ப பேருந்துகள் இயக்கப்படும்: ஆயுதபூஜை விடுமுறை முடிந்து ஊர் திரும்ப மக்கள் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது:

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறையையொட்டி, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நேற்றும் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. முந்தைய நாட்களில் அதிகளவு மக்கள் பயணித்ததால் நேற்று பெரியளவு கூட்ட நெரிசல் இல்லை. இவ்வாறு சென்றவர்கள் ஊர் திரும்ப போதிய பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, மக்கள் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதை கண்காணிக்கும் வகையில் அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் நாளை இரவே ஊர்களுக்குச் செல்ல திட்டமிடுவர். எனவே, வரும் 25-ம் தேதி காலை சென்னையின் எல்லை பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய போலீஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE