திருவண்ணாமலை தீபம்போல இந்தியாவுக்கு புதிய நம்பிக்கை ஒளி தெரிகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீபம்போல, இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த மலப்பாம்பாடியில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகித்தார். அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திருவண்ணாமலையையும், தீபத்தையும் பிரிக்க முடியாது.அதேபோல, திருவண்ணாமலை யையும், திமுகவையும் யாராலும் பிரிக்க முடியாது. 2021-ல் திமுக ஆட்சி அமைக்க அடித்தளமாக அமைந்தது திருவண்ணாமலை. `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தை, இங்கிருந்துதான் தொடங்கினேன்.

வாக்குச்சாவடி பொறுப்பாளர் கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். தினமும் ஒரு மணி நேரம் கட்சிக்காக ஒதுக்கி, தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்.

திமுகவை எதிர்த்தவர்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைப் பாராட்டி வருவதால், எதிரிகள் அச்சமடைந்துள்ளனர். திமுக ஆட்சியில் புதிய திட்டங்களை தொடங்கவில்லை என்று வயிற்று எரிச்சலில் பேசுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை தொடங்கிவைப்பதாக பொய் கூறுகிறார்.

மகளிர் உரிமைத்தொகை, இலவசப் பேருந்து பயணம், காலை சிற்றுண்டி, புதுமைப் பெண், நான் முதல்வன், நம்மைக் காக்கும் 48, இல்லம் தேடிக் கல்வி, 2 லட்சம் விவசாய மின் இணைப்புகள், அனைத்து சாதியினரும் அர்ச்சகர், ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு போன்றவைஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களா? தரையில் ஊர்ந்துசென்ற பழனிசாமியே, கொஞ்சம் தலையை தூக்கிப் பாருங்கள். வேளாண்மை சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவுக்கு பல்லக்கு தூக்கியவர்தான் பழனிசாமி.

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அனைத்து தேர்தல்களிலும் தோற்றவர் பழனிசாமி. வரும் மக்களவைத் தேர்தலிலும் அவர் முழுமையாக தோற்கடிக்கப்படுவார். தேர்தல் களம் என்பது போர்க்களம் போன்றது. அது நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பல போர்களை சந்தித்தது திருவண்ணாமலை மாவட்டம். இந்திய ஜனநாயகத்தை காக்கக் கூடிய போர்க் களத்தில் தற்போது நாம் இருக்கிறோம். இந்த தேர்தலில் நாம் காணப்போகும் வெற்றிதான், எதிர்கால இந்தியாவுக்கு மிக முக்கியமானது. மக்களைப் பிளவுபடுத்தி, அடிமைப்படுத்தும் பாஜகஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தல் களத்துக்கு, திருவண்ணாமலை பயிற்சி பாசறைக் கூட்டம் வழிகாட்டியாக அமையட்டும். திருவண்ணாமலை தீபம் தெரிவதுபோல, இந்தியாவுக்கு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சியில், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சட்டப்பேரவை துணைத் தலை வர் கு.பிச்சாண்டி, அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, சக்கரபாணி, ஆர்.காந்தி, செஞ்சி மஸ்தான், எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் தரணிவேந்தன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE