புரட்டாசி மாதம் முடிந்ததையடுத்து காசிமேட்டில் களைகட்டிய மீன் வியாபாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: புரட்டாசி மாதம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேட்டில் மீன் விற்பனை களைகட்டியது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலானோர் விரதம் இருப்பர். இதனால், புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை உண்ண மாட்டார்கள். இந்நிலையில், கடந்தசெவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது. புரட்டாசி முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால், காசிமேட்டில் மீன்களை வாங்க நேற்று அதிகாலை முதலே கூட்டம் குவியத் தொடங்கியது. இதனால், மீன் வியாபாரம் களைகட்டியது.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற படகுகளும், புயல் எச்சரிக்கை காரணமாக கடலில் இருந்த படகுகளும் நேற்று முன்தினம் முதல்கரை திரும்பின. சுமார் 200-க்கும்மேற்பட்ட படகுகள் கரை திரும்பின. இதனால், மீன் வரத்து அதிக அளவில் இருந்தது. குறிப்பாக, சங்கரா, சுறா, வஞ்சிரம், வவ்வால், பாறை, சாளை உள்ளிட்ட மீன்களை மீனவர்கள் அதிக அளவில் பிடித்து வந்தனர். வரத்து அதிகம் என்பதால் விலையும் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. வஞ்சிரம் மீன் ஒரு கிலோ 700-க்கும், சங்கரா மீன் ரூ.400-க்கும், வவ்வால் கிலோ ரூ.450-க்கும், சாளை கிலோ ரூ.100-க்கும், இறால் கிலோ ரூ.400-க்கும், நண்டு கிலோ ரூ.500-க்கும் விற்பனை ஆயின.

புரட்டாசி மாதம் முடிந்தாலும் தற்போது நவராத்திரி விழா நடைபெறுவதால் பலர் இன்னும் அசைவம் சாப்பிடத் தொடங்கவில்லை. வரும் செவ்வாய்க்கிழமையுடன் நவராத்தி விழா நிறைவடைவதால் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை மீன்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என மீனவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE